வருவாய்த்துறை சார்பில் பள்ளிக்கூட மைதானத்தில் நுழைய தடை விதித்து அறிவிப்பு பலகை


வருவாய்த்துறை சார்பில் பள்ளிக்கூட மைதானத்தில் நுழைய தடை விதித்து அறிவிப்பு பலகை
x
தினத்தந்தி 19 Dec 2018 10:00 PM GMT (Updated: 19 Dec 2018 8:22 PM GMT)

கோவையில் பள்ளிக்கூட மைதானத்தில் வருவாய்த்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைத்து நுழைய தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கிறிஸ்தவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் ஏற்படுத்தினர்.

சிங்காநல்லூர்,

கோவை சிங்காநல்லூரை அடுத்த சவுரிபாளையம் கல்லறை வீதியில் 150 ஆண்டுகள் பழமையான புனித சவேரியார் ஆலயம் இருந்தது. அதை இடித்து விட்டு, தற்போது புதிதாக அதே இடத்தில் ஆலயம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த ஆலயத்தின் அருகில் ஆலயத்துக்கு சொந்தமான பள்ளிக்கூடம், மற்றும் மைதானம் உள்ளது.

இந்த நிலையில் நேற்று அந்த பள்ளிக்கூட மைதானத்தில், கோவை வருவாய்த்துறை சார்பில், இது அரசுக்கு சொந்தமான இடம், ஆகவே அனுமதி இல்லாமல் யாரும் உள்ளே நுழையாதீர்கள் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இது குறித்து ஆலய பங்குத்தந்தை ஜெகன் ஆண்டனியிடமும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பங்கு மக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அங்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். அவர்கள், அந்த அறிவிப்பு பலகையை அகற்ற வேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள்,திரண்டு இருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் கார்த்திக் எம்.எல்.ஏ. நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். நீண்டநேர பேச்சுவார்த்தைக்கு பிறகு அரசு அதிகாரிகள் அந்த அறிவிப்பு பலகையை அகற்றினர். இதைதொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

அவர்கள் கூறும்போது, இங்குள்ள ஆலயம் 150 ஆண்டுகள் பழமையானது. அதன் அருகில் 100 ஆண்டுக்கு மேலாக பள்ளி மற்றும் மைதானம் உள்ளது. அந்த மைதானம், பள்ளிக்கூடத்தின் பயன்பாட்டில்தான் இருந்து வருகிறது. ஆனால் இந்த மைதானத்தை பள்ளி நிர்வாகம் பயன்படுத்துவதில்லை என்கிற தவறான தகவல் காரணமாக அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். தற்போது அதை அகற்றி விட்டனர் என்றனர். 

Next Story