திருவள்ளூர் நகராட்சியில், பிப்ரவரி இறுதிக்குள் அனைத்து வீடுகளுக்கும் பாதாள சாக்கடை இணைப்பு நகராட்சிகள் நிர்வாக மண்டல இயக்குனர் தகவல்
திருவள்ளூர் நகராட்சியில் பிப்ரவரி மாத இறுதிக்குள் அனைத்து வீடுகளுக்கும் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படும் என்று நகராட்சிகள் நிர்வாக மண்டல இயக்குனர் இளங்கோவன் தெரிவித்தார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரில் உள்ள டோல்கேட் பகுதி 1-வது வார்டில் பாதாள சாக்கடை இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியை நகராட்சிகள் நிர்வாக மண்டல இயக்குனர் இளங்கோவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் அவர் திருவள்ளூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே உள்ள ராஜம்மாள் பூங்காவில் உள்ள உரக்குடிலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் திருவள்ளூரை அடுத்த ஈக்காட்டில் உள்ள மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரிக்கும் உரக்குடிலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
8,700 வீடுகள்
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 8 ஆயிரத்து 700 வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை 2 ஆயிரத்து 400 வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள கழிவுநீரை இந்த பாதாள சாக்கடையில் விடுவதால் சாலைகளில் கழிவுநீர் தேங்கும் நிலை ஏற்படாது. பாதாள சாக்கடை திட்டத்திற்காக பொதுமக்கள் பணம் செலுத்தாமலும் இணைப்பு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இணைப்பு வழங்குவதற்கு வீட்டு வரி ரசீது இருந்தால் போதும். அதற்கான தொகையை தவணை முறையில் பெறவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பிப்ரவரி மாதத்திற்குள்...
திருவள்ளூர் நகராட்சியில் வருகிற பிப்ரவரி மாதத்திற்குள் அனைத்து வீடுகளுக்கும் பாதாள சாக்கடை இணைப்பு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 17 இடங்களில் உரக்குடில்கள் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் கழிவுகள் அதில் போடப்படுவதால் திருவள்ளூர் நகராட்சியில் தற்போது எங்குமே குப்பை தொட்டிகள் இல்லாமல் உள்ளது. விரைவில் திருவள்ளூர் நகராட்சி முழுவதும் குப்பை தொட்டிகள் இல்லாத நிலை உருவாக்கி மக்கும், மக்காத குப்பைகளை உரக்குடில்களில் இட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த உரக்குடில்களில் இருந்து பெறப்படும் உரங்களானது விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவருடன் திருவள்ளூர் நகராட்சி ஆணையர் முருகேசன், என்ஜினீயர் செல்வகுமார், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், சுகாதார ஆய்வாளர் ரமேஷ், பணி மேற்பார்வையாளர் அமுதன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story