திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் புதிய கதவணை கட்டும் பணியை 2 ஆண்டுகளில் முடிக்க திட்டம்


திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் புதிய கதவணை கட்டும் பணியை 2 ஆண்டுகளில் முடிக்க திட்டம்
x
தினத்தந்தி 19 Dec 2018 11:00 PM GMT (Updated: 19 Dec 2018 8:38 PM GMT)

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் புதிய கதவணை கட்டும் பணியை 2 ஆண்டுகளில் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். முதல்முறையாக 55 தானியங்கி மதகுகள் அமைக்கப்படுகிறது.

திருச்சி,

திருச்சி-கரூர் சாலையில் ஜீயபுரம் அருகில் முக்கொம்பு உள்ளது. கர்நாடக மாநிலம் கூர்க் மாவட்டம் தலைக்காவிரியில் காவிரி ஆறு தொடங்குகிறது. காவிரி ஆற்றின் தண்ணீர் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வீழ்ச்சியாக பரந்து விரிந்து பெருக்கெடுத்து ஓடி, சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையை அடைகிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடி ஆகும். மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கும் வேளையில் படிப்படியாக காவிரி டெல்டா மாவட்டங்களான கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்ட விவசாய பாசனத்துக்காக திறந்து விடப்படுவது வழக்கம்.

கடந்த ஆகஸ்டு மாதம் மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் பெருக்கெடுத்து கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணைக்கு வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து திருச்சி முக்கொம்பு மேலணைக்கு திறந்து விடப்பட்டது. முக்கொம்பு மேலணையில் இருந்து இரண்டாக பிரிந்து செல்கிறது. ஒரு பிரிவு காவிரி ஆறாக காவிரி டெல்டா பகுதிக்கும், மற்றொரு பிரிவு திருச்சி கொள்ளிடம் மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆறாக (உபரிநீராக) செல்கிறது.

காவிரி ஆற்றைவிட, கொள்ளிடம் ஆற்றில்தான் தேவைக்கு அதிகமான நீரை உபரியாக திறந்து விடுவது வழக்கம். அதன்படி, தொடர்ச்சியாக 20 நாட்கள் தண்ணீர் பெருக்கெடுத்து சென்றதால், கடந்த ஆகஸ்டு 22-ந் தேதி இரவு 8 மணிக்கு முக்கொம்பு கொள்ளிடத்தில் 5 முதல் 13 வரையுள்ள மதகுகள், அதாவது 9 மதகுகள் உடைந்து கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன. இதனால், போக்குவரத்து அறவே துண்டிக்கப்பட்டது. இந்த மேலணையானது 1836-ம் ஆண்டு ஆர்தர்காட்டன் என்பவரால் கட்டப்பட்டதாகும். கிட்டத்தட்ட 182 ஆண்டுகள் பழமையான அணை ஆகும். தண்ணீர் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மேலணை உடைந்தது. ஆனாலும், கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் மணல் எடுக்கப்பட்டதன் காரணமாகவே, அதன் தாங்கும் சக்தியை ராட்சத தூண்கள் இழந்து கொள்ளிடம் மேலணை உடைந்தது என்பது விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டு ஆகும்.

மேலணை உடைந்த பின்பு ஆகஸ்டு 24-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து பார்வையிட்டார். அப்போது அவர், கொள்ளிடம் ஆற்றின் கீழ் பகுதியிலும், வடக்கு-தெற்கு பகுதியில் குறுக்கேயும் புதிய கதவணை ரூ.410 கோடி செலவில் கட்டப்படும் என அறிவித்தார்.

மேலும் கொள்ளிடம் மேலணை உடைந்த பகுதியில் தற்காலிக சீரமைப்புக்காக ரூ.95 லட்சம் ஒதுக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மாதம் வரையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மணல்மூட்டைகள் மற்றும் பாறாங்கற்கள் போடப்பட்டு உடைந்த மதகு பகுதி வழியாக தண்ணீர் வெளியேறாமல் தடுக்கப்பட்டது. ஆனாலும், இன்னமும் சீரமைக்கப்பட்ட இடத்தில் இருந்து நீர்க்கசிவாக வினாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் வெளியேறியபடிதான் உள்ளது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொள்ளிடத்தில் புதிய கதவணை கட்டுவதற்காக ரூ.387 கோடியே 60 லட்சம் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு நிர்வாக அனுமதி அளித்தது.

புதிய கதவணை கட்டும் பணி எப்போது தொடங்கப்படும் என்று கேட்டபோது அதிகாரி ஒருவர் கூறிய தாவது:-

கொள்ளிடம் ஆற்றில் தற்போது மதகுகள் உடைந்த பகுதிக்கு கீழ் பகுதியில் நவீன தொழில்நுட்பத்துடன் புதிய கதவணை கட்டப்படுகிறது. இதை கதவணை என்பதை விட ‘ரெகுலேட்டர்’ என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது வெள்ளப்போக்கி என்று சொல்லலாம். கொள்ளிடம் ஆற்றின் கீழ் பகுதியில் 75 மீட்டர் நீளத்துக்கு கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆற்றில் சாயக் கழிவுகள், ஆலைக்கழிவுகள் உள்ளிட்டவை கலந்து வருவதால் இரும்பு கம்பிகள் என எதுவானாலும் துருப்பிடிக்க வாய்ப்பு உள்ளது.

எனவே, கடலில் பாலம் அமைத்தால் எப்படி நவீன தொழில் நுட்பத்தை கையாள்கிறமோ அதேபோல தரையின் மேல்பகுதியில் இருந்து 22 மீட்டர் ஆழத்துக்கு பவுண்டேசன் போடப்படுகிறது. தரையின் மேல்மட்ட உயரத்தில் ராட்சத தூண்கள் அமைப்பது உள்பட 5½ அடி உயரத்துக்கு அமைக்கப்பட உள்ளது. அதன் மேல் 3.75 மீட்டர் அகலத்துக்கு ‘சிங்கிள்ரோடு’ அமைக்கப்படும். இதில் இலகுரக வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும். பாலத்தில் பெரிய வாகன போக்குவரத்துக்கு அனுமதிக்க முடியாது. அப்படி அனுமதித்தால், கட்டிட ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும். மேலும் தமிழகத்திலேயே முதல் முறையாக தானியங்கி மதகுகள் (ஷட்டர்கள்) அமைக்கப் படுகின்றன. அதாவது கொள்ளிடம் ஆற்றில் மட்டும் 45 தானியங்கி மதகுகளும், வடக்கு பகுதியில் 10 தானியங்கி மதகுகளும் அமைக்கப்படும். இவை தண்ணீரின் வேகம் மற்றும் நீர்மட்டத்தை தானாகவே கணக்கீட்டு அதன்படி, தானாகவே திறந்து கொள்ளும் தொழில்நுட்பத்தை கொண்டது.

வருகிற ஜனவரி 30-ந் தேதி டெண்டர் விடப்படுகிறது. அதன் பின்னர், தற்காலிகமாக ஒரு தடுப்பணை கட்டப்பட்டு, அப்பணிகள் முடிந்த பின்னரே நிரந்தரமான ரெகுலேட்டர்(கதவணை) கட்டும்பணி தொடங்கி, 2 ஆண்டுகளில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். தமிழக முதல்-அமைச்சர் நேரடி கண்காணிப்பிலே பணிகள் நடக்க உள்ளதால் மிகவும் விரைவாகவே நவீன தொழில்நுட்பத்துடன் பணி முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story