புயல் நிவாரணம் வழங்கக்கோரி அமைச்சர் விஜயபாஸ்கர் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட முயற்சி


புயல் நிவாரணம் வழங்கக்கோரி அமைச்சர் விஜயபாஸ்கர் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட முயற்சி
x
தினத்தந்தி 20 Dec 2018 4:30 AM IST (Updated: 20 Dec 2018 2:23 AM IST)
t-max-icont-min-icon

புயல் நிவாரணம் வழங்கக்கோரி அமைச்சர் விஜயபாஸ்கரின் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற பொதுமக்களை போலீசார் சமரசப்படுத்தினர்.

ஆவூர்,

தமிழகத்தில் வீசிய கஜா புயலுக்கு புதுக்கோட்டை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. புயல் தாக்கி ஒரு மாதத்துக்கு மேலாகியும் மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. அவர்களுக்கு அரசு சார்பில் நிவாரண பொருட்கள் இன்னும் முறையாக கிடைக்கவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியல் போன்ற பல்வேறு போராட்டங்களை நடத்தி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் விராலிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட மாத்தூர் மற்றும் மண்டையூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா முன்னிலை வகித்தார்.

விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி பேசினார். இதில் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி உள்பட அரசு அதிகாரிகள், அ.தி.மு.க.நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, விழாவில் கலந்து கொள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் பள்ளிக்கு காரில் வந்தார். அவருக்கு வழிநெடுக அ.தி.மு.க.நிர்வாகிகள் கட்சி கொடியுடன் நின்று வரவேற்பு கொடுத்தனர். அப்போது குமாரமங்கலம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு கஜா புயல் நிவாரண பொருட்கள் இன்னும் வழங்கப்படவில்லை. எங்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே திருச்சி-புதுக்கோட்டை சாலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இதைப்பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ், மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் ஆகியோர் அவர்களை தடுத்து நிறுத்தி சமரச முயற்சியில் ஈடுபட்டனர். இதனால், போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது போலீசார், உங்களது கோரிக்கையை அமைச்சரிடம் எடுத்து சொல்லுங்கள், அவர் உங்களுக்கு நிவாரண பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுப்பார் என்று கூறியதன்பேரில், அமைதி அடைந்தனர். பின்னர், விழா நிகழ்ச்சிகளை முடித்து விட்டு வந்த அமைச்சர் விஜயபாஸ்கரை அப்பகுதி மக்கள் சூழ்ந்து கொண்டு, புயலால் பாதிக்கப்பட்ட ஓட்டு வீடுகளில் குடியிருக்கும் எங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்படவில்லை. ஆனால், எங்கள் ஊராட்சியில் எந்த பாதிப்புமே இல்லாத கான்கிரீட் வீடுகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என்று முறையிட்டனர் இதைக்கேட்ட அமைச்சர், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதேபோல விராலிமலை தாலுகா ஆவூர் அருகே உள்ள பேராம்பூரில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசின் 27 வகையான நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு டோக்கன் வழங்கப்பட்டது. இதையடுத்து நேற்று பேராம்பூரில் டோக்கன் கொடுத்தவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்குவதற்காக நீர்பழனி வருவாய் ஆய்வாளர் லலிதா மற்றும் கிராம உதவியாளர்கள் அங்கு வந்தனர்.

இதையறிந்த நிவாரண பொருட்களுக்கான டோக்கன் கிடைக்காத பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் வருவாய் ஆய்வாளரை முற்றுகையிட்டு புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும் என்று கூறி விராலிமலை- கீரனூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதேபோல அரிமளம் ஒன்றியம் ராயவரத்தில், இதுவரை நிவாரண பொருட்கள் இதுவரை வழங்கப்படாததை கண்டித்தும், உடனடியாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண பொருட்கள் வழங்கக்கோரியும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் தாசில்தார் ரமேஷ், பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மாறன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். 

Next Story