3–வது நாளான நேற்று ஒப்பாரி வைத்து பெண்கள் போராட்டம்; அங்கேயே சமையல் செய்து சாப்பிடுகிறார்கள்


3–வது நாளான நேற்று ஒப்பாரி வைத்து பெண்கள் போராட்டம்; அங்கேயே சமையல் செய்து சாப்பிடுகிறார்கள்
x
தினத்தந்தி 20 Dec 2018 5:00 AM IST (Updated: 20 Dec 2018 2:39 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளின் தொடர் காத்திருப்பு போராட்டத்தின் 3–வது நாளான நேற்று பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அங்கேயே சமையல் செய்து சாப்பிடுகிறார்கள்.

காமநாயக்கன்பாளையம்,

தமிழகத்தில் விவசாய விளை நிலங்களின் வழியாக உயர் மின் கோபுர பாதை அமைத்து மின்சாரம் கொண்டு செல்வதை எதிர்த்தும், கேரளாவில் உள்ளதை போல் சாலையோரம் கேபிள் மூலம் மின்சாரம் கொண்டு செல்ல வலியுறுத்தியும் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் பல்லடம் அருகே கள்ளிபாளையத்தில் கடந்த 17–ந் தேதி தொடங்கி நேற்று 3–வது நாளாக தொடர்ந்தது. இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் கொங்கு ராஜாமணி தலைமை தாங்கினார்.

இரவில் கடும் குளிரிலும் போராட்டத்தை விவசாயிகள் தொடர்கிறார்கள். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு பிட்டு, பந்தலில் படுத்து உறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பகல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் இரவு நேரங்களில் வீட்டிற்கு சென்று விட்டு காலையில் மறுபடியும் போராட்ட பந்தலுக்கு வந்து விடுகின்றனர்.

இந்த நிலையில் போராட்டத்தின் 3–வது நாளான நேற்று போராட்ட பந்தலின் முன்பு மாதிரி உயர் மின் கோபுரம் அமைத்து அதில் விவசாயி ஒருவர் தூக்கில் தொங்குவது போல் தொங்கவிட்டு அதை சுற்றி பெண்கள் ஒப்பாரி வைத்தனர். அப்போது ‘‘வெளியேறு, வெளியேறு,விளை நிலத்தை விட்டு வெளியேறு, பவர்கிரிட் நிறுவனமே வெளியேறு, என்றும், அமைக்காதே, அமைக்காதே, விவசாய விளை நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்காதே’’ என்று கோசமிட்டனர்.

இந்த தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு முன்னாள் எம்.பி.கணேசமூர்த்தி, உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் செல்லமுத்து, முன்னாள் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் தங்கவேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி சண்முகம்,

காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில செயலாளர் ராஜ்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் வாவிபாளையம் பார்த்தசாரதி, கண்டியன்கோவில் கோபால், தே.மு.தி.க பொதுகுழு உறுப்பினர் மயில்சாமி,ஒன்றிய செயலாளர் ராமசாமி, ம.தி.மு.க.ஒன்றிய செயலாளர் புத்தரச்சல் மணி, சுரேஷ்(ஏர்முனை அமைப்பு செயலாளர்) கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கநிர்வாகிகள் வேலுமணி, மைனர்தங்கவேல் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Next Story