சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் 57 பேருக்கு ரூ.21½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்; கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வழங்கினார்


சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் 57 பேருக்கு ரூ.21½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்; கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வழங்கினார்
x
தினத்தந்தி 20 Dec 2018 2:39 AM IST (Updated: 20 Dec 2018 2:39 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் நடந்த சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் 57 பேருக்கு ரூ.21½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வழங்கினார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி பேசியதாவது:–

வயது முதிர்ந்த ஆதரவற்ற கணவரால் கைவிடப்பட்ட முஸ்லிம் மகளிர் மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள மகளிருக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும் மற்றும் அவர்களுக்கு உதவும் வகையிலும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் தொடங்கி செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் மூலம் அவர்களுக்கு தையல் எந்திரம், மாவு அரைக்கும் எந்திரம், மருத்துவ உதவி, திருமண நிதி உதவி மற்றும் உடல் ஊனமுற்றோருக்கான 3 சக்கர வாகனம் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் சிறுபான்மையினர் மக்களுக்காக கல்வி உதவித்தொகை, சிறுதொழில் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, ஜெருசலேம் புனித பயணத்துக்காக சிறப்பு நிதி உதவித்தொகை, கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளுக்கான நிதியுதவி, உலமாக்கல் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தின் நலத்திட்டங்கள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

டாம்கோ திட்டத்தின் மூலமாக கல்விக்கடன் அதிகபட்சமாக ரூ.3 லட்சம் 3 சதவீத வட்டியுடன் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் சிறுவணிக கடன் ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் 7 சதவீதம் வட்டியில் ரூ.1 லட்சம் வரையும், தனிநபர் கடன் 6 சதவீதம் வட்டியில் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இதன் நோக்கம் சிறுபான்மையினர் மக்கள் தங்கள் வாழ்வில் அரசின் அனைத்து திட்டங்களையும் முழுமையாக பெற்று முன்னேற வேண்டும் என்பதே ஆகும். எனவே அரசின் அனைத்து திட்டங்களையும் சிறுபான்மையின மக்கள் பெற்று பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து ஒரு பயனாளிக்கு தையல் எந்திரம், ஒருவருக்கு நலிந்தோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் ரூ.20 ஆயிரம், 4 சுய உதவிக்குழுக்களுக்கு டாம்கோ மூலம் ரூ.18 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் கடனுதவி, 7 பேருக்கு முதல்–அமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய ரூ.2 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பிலான பசுமை வீடுகள் என மொத்தம் 57 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 66 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

இதில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பாபு ராபர்ட், மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story