பர்கூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானை அட்டகாசம்


பர்கூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானை அட்டகாசம்
x
தினத்தந்தி 19 Dec 2018 9:27 PM GMT (Updated: 19 Dec 2018 9:27 PM GMT)

பர்கூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானை அட்டகாசம் செய்தது.

அந்தியூர்,

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, மான், கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானைகள் அடிக்கடி வனப்பகுதியையொட்டி உள்ள தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் தோட்டத்தில் காவல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பர்கூர் அருகே உள்ள மூலையூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர் தோட்டம் வனப்பகுதியையொட்டி உள்ளது.

இந்த தோட்டத்தில் வாழைகள் மற்றும் காய்கறிகளை பயிரிட்டு உள்ளார். மேலும் மாடுகளுக்கு தீவனமாக வைக்கோல் போரையும் அங்கு வைத்து உள்ளார். நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் மற்ற விவசாயிகளுடன் செல்வராஜ் தோட்டத்துக்கு காவலுக்கு சென்றார். அப்போது அவர் ஒரு நாயையும் அழைத்து சென்றார். பின்னர் இரவு தோட்டத்தில் உள்ள பரணில் செல்வராஜ் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார்.

அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆண் யானை ஒன்று செல்வராஜின் தோட்டத்துக்குள் புகுந்தது. பின்னர் அங்கு பயிரிடப்பட்டு உள்ள வாழைகளை தின்றும், காலால் மிதித்தும் நாசப்படுத்தியது. மேலும், தோட்டத்தில் வைக்கோலையும் அந்த யானை தின்றது. அப்போது செல்வராஜ் அழைத்துச்சென்ற நாய் குரைத்தது. இதனால் தூங்கிக்கொண்டு இருந்த அவர் எழுந்து பார்த்தபோது ஆண் யானை ஒன்று வைக்கோலை தின்பதை கவனித்தார்.

இதைத்தொடர்ந்து மற்ற விவசாயிகளுக்கு அவர் தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தார். அதன்பேரில் விவசாயிகள் அங்கு வந்தனர். பின்னர் விவசாயிகளுடன் செல்வராஜும் சேர்ந்து அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றார். இதனால் ஆவேசமடைந்த யானை விவசாயிகளை துரத்தியது.

இதன்காரணமாக அவர்கள் அனைவரும் அங்கிருந்து தலைதெறிக்க ஓடினார்கள். நள்ளிரவு 1 மணி வரை அந்த யானை வைக்கோலை தின்று கொண்டு இருந்தது. மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீரை குடித்துவிட்டு தானாகவே அந்த ஆண் யானை வனப்பகுதிக்கு சென்றுவிட்டது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘பர்கூர் வனப்பகுதியில் இருந்து அடிக்கடி யானைகள் வெளியேறி விவசாய நிலங்களில் புகுந்து வாழை மற்றும் மக்காச்சோள பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது. இதனால் பயிர்களை சாகுபடி செய்து உள்ள எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே வனத்துறையினர் யானைகள் விவசாய நிலங்களில் புகாதவாறு அகழி அமைக்க வேண்டும். மேலும் இரவு நேரங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும்’ என்றனர்.


Next Story