ஈரோட்டில் 3–வது நாளாக போராட்டம்: உயர் அழுத்த மின்கோபுர பாடை கட்டி ஒப்பாரி வைத்த பெண்கள்


ஈரோட்டில் 3–வது நாளாக போராட்டம்: உயர் அழுத்த மின்கோபுர பாடை கட்டி ஒப்பாரி வைத்த பெண்கள்
x
தினத்தந்தி 20 Dec 2018 2:57 AM IST (Updated: 20 Dec 2018 2:57 AM IST)
t-max-icont-min-icon

உயர் அழுத்த மின் கோபுரங்களுக்கு எதிராக ஈரோட்டில் நேற்று 3–வது நாளாக நடந்த போராட்டத்தின் போது பெண்கள் பாடை கட்டி போராட்டம் நடத்தினார்கள்.

ஈரோடு,

தமிழகத்தில் ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் மற்றும் பவர் கிரிட் நிறுவனம் ஆகியவை இந்த பணிகளை செய்து வருகின்றன.

உயர் அழுத்த மின்கோபுரங்கள் விவசாய நிலங்கள் வழியாக போடப்பட்டு வருகின்றன. இது விவசாயிகளை பெரிதும் பாதிப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகிறார்கள். மேலும், விவசாய நிலங்களுக்கு பாதிப்பு இல்லாமல் சாலையோரங்கள் வழியாக புதைவட கேபிள்களாக மின்சாரம் கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

விவசாயிகளின் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுதொடர்பான பேச்சுவார்த்தையிலும் உரிய உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே தொடர் காத்திருப்பு போராட்டத்தை உயர் மின் கோபுரங்களுக்கு எதிராக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் அறிவித்தது. அதன்படி 8 இடங்களில் கடந்த 3 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது.

ஈரோடு அருகே உள்ள மூலக்கரை பகுதியில் தொடர் போராட்டம் நேற்று 3–வது நாளாக நடந்தது. போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஏ.எம்.முனுசாமி தலைமை தாங்கினார். ம.தி.மு.க. பொருளாளர் அ.கணேசமூர்த்தி போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

நேற்று ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 500–க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின் போது உயர் அழுத்த மின் கோபுரத்தின் படம் வரைந்த உருவ பொம்மை ஒன்று பாடையில் கட்டி கொண்டு வரப்பட்டது. அதனை போராட்ட பந்தல் முன்பு வைத்து பெண்கள் ஒப்பாரி வைத்தனர். சில பெண்கள் விளக்குமாறால் உயர் மின் அழுத்த கோபுர உருவ பாடையை அடித்தனர். உருவபொம்மையை எரிக்கவும் போராட்டக்குழுவினர் முயற்சி செய்தனர். இது போராட்ட களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது பணியில் இருந்த போலீசார் அதை தடுத்து, உருவ பொம்மையை எரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். அதன்பேரில், பொம்மையை எரிக்காமல், பாடையாகவே வைத்து அதைச்சுற்றி பெண்கள் ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்றைய போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் இளைஞர் அணி தலைவர் சூரியமூர்த்தி, பொருளாளர் கே.கே.சி.பாலு, மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் சதாசிவன் மற்றும் ஜெகநாதன் ஆகியோர் நேரில் வந்து ஆதரவு அளித்தனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. நா.பெரியசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ரகுராமன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சண்முகம், காலிங்கராயன் பாசன விவசாயிகள் சங்க தலைவர் வி.எம்.வேலாயுதம், மக்கள் சிவில் உரிமைக்கழகம் பொறுப்பாளர் கண.குறிஞ்சி ஆகியோர் ஆதரவு தெரிவித்து பேசினார்கள். உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் கொங்கு எம்.ராஜாமணி மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

கூட்டு இயக்க நிர்வாகிகள் சிலர் கூறும்போது, ‘விவசாயிகளின் போராட்டத்துக்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு அளிக்க வேண்டும். விவசாயிகளின் நிலம் பறிக்கப்பட்டு அவர்கள் பாதிக்கப்படும்போது மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பது வேதனை அளிக்கிறது. உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான போராட்டம் மக்கள் இயக்கமாக மாற வேண்டும். அரசியல் கட்சிகளின் ஆதரவு இருந்தாலும் கட்சி தொண்டர்களையும் திரளாக போராட்டத்தில் கலந்து கொள்ளச்செய்ய வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டனர்.

போராட்டத்தை சி.எம்.துளசிமணி, சென்னிமலை பொன்னுசாமி, வி.பி.குணசேகரன், பவானி கவின் உள்ளிட்ட கூட்டு இயக்க நிர்வாகிகள் ஒருங்கிணைத்து நடத்தினார்கள்.


Next Story