காணொலி காட்சி மூலம் விழுப்புரம் பா.ஜனதா நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்


காணொலி காட்சி மூலம் விழுப்புரம் பா.ஜனதா நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
x
தினத்தந்தி 20 Dec 2018 3:45 AM IST (Updated: 20 Dec 2018 3:05 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா நிர்வாகிகளுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல அறிவுரை கூறினார்.

விழுப்புரம்,

வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி பாரதீய ஜனதா கட்சியை வலுப்படுத்தும் விதமாக பிரதமர் நரேந்திரமோடி, ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதி வாரியாக பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களுடன் ‘எனது வாக்குச்சாவடி வலுவான வாக்குச்சாவடி’ என்ற நிகழ்ச்சியின் வாயிலாக காணொலி காட்சி மூலம் சந்தித்து கலந்துரையாடி வருகிறார்.

அந்த வகையில் நேற்று மாலை விழுப்புரம், தென்சென்னை, காஞ்சீபுரம் உள்பட 5 பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்டு, பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் விதம், தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற வகுக்க வேண்டிய வியூகங்கள் குறித்து வாக்குச்சாவடி முகவர்களுடன் கலந்துரையாடி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

அதன்படி விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியின் சார்பில் காணை மண்டல தலைவர் சுந்தர் கூறும்போது, மக்கள் மத்தியில் தவறான தகவல்களை காங்கிரஸ் கட்சி பரப்பி வருகிறது. இதனை எப்படி எதிர்கொள்வது என்று பிரதமர் மோடியிடம் கேட்டோம்.

அதற்கு பதில் அளித்து பிரதமர் நரேந்திரமோடி பேசுகையில், இது சகஜமான ஒன்றுதான். எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். பா.ஜ.க. மீது குற்றம் சாட்டப்பட்ட தவறான தகவல்களை முறியடிக்க மக்களிடம் நாம் நெருங்கி பணியாற்றி அவர்களது மீதான நம்பிக்கையை பெற வேண்டும். பா.ஜ.க. அரசின் திட்டங்களை பற்றி மக்களிடம் கொண்டு சென்று விளக்கி அவர்களுக்கு தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது என்பதை புரிய வைக்கவேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியின்போது விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் அருள், மாவட்ட தலைவர்கள் விநாயகம், தாமோதரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சிவ.தியாகராஜன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் சுகுமார், மனோகர், ராம.ஜெயக்குமார், தர்மராஜ், கண்ணன், மாவட்ட நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், பாலசுந்தரம், வினோத், துரைசக்திவேல் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story