ஒரு வாரத்திற்கு பிறகு மீன்பிடித்து கரை திரும்பிய மீனவர்கள்; எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம்
1 வாரத்திற்கு பிறகு மீன் பிடித்து கரை திரும்பிய மீனவர்கள் எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர்.
ராமேசுவரம்,
வங்க கடலில் உருவாகிஇருந்த புயல் சின்னம் காரணாக கடந்த 1 வாரமாக ராமேசுவரம்,பாம்பன் பகுதியில் உள்ள மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு இந்தது.
புயல் கரையை கடந்ததை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு பிறகு ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை 500–க்கும் மேற்பட்ட மீன் பிடி விசைப் படகில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வடக்கு கடலான பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்றனர்.
இந்த மீனவர்கள் அனைவரும் இன்று(வியாழக்கிழமை) காலை கரை திரும்புவார்கள்.இதே போல் பாம்பன் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் 80–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 300–க்கும் மேற்பட்ட மீனவர்கள் தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர்.
இந்த மீனவர்கள் அனைவரும் நேற்று காலை சாவாலை, கிளிமீன், பாறை, கட்டா, மாவுலா, களவாய் உள்ளிட்ட பல வகை மீன்களுடன் கரை திரும்பினார்கள். இதில் ஒரு படகில் மீனவர்களின் வலையில் 1½ கிலோ எடை கொண்ட விலை உயர்ந்த மணிசிங்கி இறால் மீன் சிக்கி இருந்தது.
இது பற்றி மீனவர் பேட்ரிக் கூறியதாவது:– ஒரு வாரத்திற்கு பிறகு மீன் பிடிக்க சென்ற வந்தும் எதிர்பார்த்த அளவிற்கு மீன்கள் கிடைக்கவில்லை. மணிசிங்கி இறால் 1 கிலோ ரூ. 6ஆயிரத்து 500 வரை விலைபோகிறது. பாம்பன் மீனவர்களின் வலையில் பிடிபட்டுள்ள மணிசிங்கிஇறால் ரூ. 9 ஆயிரத்திற்கு விலைபோகும். சிங்கப்பூர்,மலேசியா உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கு இந்த சிங்கிஇறால் மீன் அனுப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். ஒரு வாரமாக களையிழந்து காணப்பட்ட பாம்பன் தெற்குவாடி துறைமுக கடற்கரை பகுதி மீனவர்கள் மீன் பிடித்து கரை திரும்பியதால் களைகட்டி காணப்பட்டது.
இந்நிலையில் சென்னை பொன்னேரியில் உள்ள எம்.ஜி.ஆர்.மீன்வளக் கல்லூரியில் படிக்கும் 50–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் மீனவர்கள் பிடித்து வந்த பாறை,நண்டு,கணவாய்,சிங்கிஇறால் மீன் உள்ளிட்ட பல வகை மீன் களையும் பார்த்து ஆச்சர்யமடைந்ததுடன் அனைத்து மீன்களையும் மாணவர்கள் தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்து கொண்டனர்.ஒவ்வொரு மீன்களை பற்றிய விவரங்களை மீனவர்களிடம் மிகுந்த ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொண்டனர்.
இதுபற்றி மாணவர்கள் புவனேசுரவன்,சத்யா,நந்திதாஆகியோர் கூறியதாவது:–
பொன்னேரியில் உள்ள மீன்வளக் கல்லூரியில் படித்து வருகிறோம்.கல்லூரியில் அருங்காட்சியகம், ஆய்வகத்தில் உள்ள மீன்களைவிட பாம்பனில் மீனவர்கள் பிடித்து வந்த பல வகையான மீன்களை பார்த்து ஆச்சர்யம் அடைந்தோம்.பலவகை மீன்களை நேரில் வந்து பார்த்து ஆய்வு செய்து அந்த மீன்களின் தகவல்களை கேட்டு அறிந்துகொண்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.