எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க அ.தி.மு.க. தயார்; அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி
எப்போது எந்த தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.
பரமக்குடி,
பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கான பூத் கமிட்டி அமைக்கும் பணி அ.தி.மு.க. சார்பில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கைத்தறி துறை அமைச்சரும், தொகுதி பொறுப்பாளருமான ஓ.எஸ்.மணியன் பார்வையிட்டு பூத் கமிட்டி உறுப்பினர்களை நேரில் சந்தித்து அவர்களது ஆவணங்களை சரிபார்த்து ஆலோசனைகளை வழங்கினார். இந்த பணியானது பரமக்குடி நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை தாங்கினார். மாநில மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி, முன்னாள் அமைச்சர் சுந்தரராஜ், முன்னாள் எம்.பி. நிறைகுளத்தான், மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் சதன் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட துணை செயலாளர் பாதுஷா, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சுந்தரபாண்டியன், ஆணிமுத்து, சோமாத்தூர் சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் முத்தையா, நாகநாதன், குப்புச்சாமி, காளிமுத்து, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் வின்செண்ட் ராஜா, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் தங்கவேல், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரஜினிகாந்த், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நிருபர்களிடம் கூறியதாவது:– எப்போது எந்த தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ள அ.தி.மு.க. தயாராக உள்ளது. அதற்காக முதல்கட்ட பணிகளை நிறைவு செய்ய உள்ளோம். தேர்தல் எப்போது என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தி.மு.க.விற்கு சென்றது பெரிதல்ல. ஏற்கனவே அவர் அங்கிருந்தவர் தான். அவர் போகாத கட்சி இல்லை.
இப்போது தான் ஒரு ரவுண்ட் முடித்துள்ளார். இனிமேல் அடுத்த ரவுண்டை தொடங்குவார். அமைச்சர்கள் அனைவரும் அமைதியாக தான் உள்ளனர். அ.ம.மு.க. பற்றி யாரும் பேசுவதில்லை. கஜா புயல் நிவாரண பணிகள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 100 சதவீதம் நிறைவடைந்து விட்டது. அனைத்து வீடுகளுக்கும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. வங்கிகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால் அங்கு பணிகள் நடப்பது தாமதம் ஏற்படுகிறது. மிகப்பெரிய பாதிப்பை சந்தித்த வேதாரண்யத்தில் நிவாரண பணிகள் இன்னும் 2 நாட்களில் நிறைவடைந்து விடும்.
ஜெயலலிதா என்ன பார்முலா வைத்திருந்தாரோ அதன் அடிப்படையில் அ.தி.மு.க. பின்பற்றி செயல்பட்டு வருகிறது. இதில் மாற்றம், திருத்தம் ஏதாவது செய்ய வேண்டுமென்றால் அதை தலைமை முடிவு செய்யும். ஸ்டெர்லைட் ஆலை உள்பட எந்த பிரச்சினையாக இருந்தாலும் பெரும்பான்மையான மக்களின் கருத்தை தான் அரசு ஆதரிக்கும். ஓ.பி.எஸ் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கையும், 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கையும் உயர்நீதி மன்றத்தில் பார்த்தோம். இங்கு சொல்லப்பட்ட தீர்ப்பு தான் உச்சநீதி மன்றத்திலும் வரும். இவ்வாறு அவர் கூறினார். பின்பு நயினார்கோவில் ஒன்றிய முன்னாள் த.மா.கா. வட்டார தலைவர் கலைச்செல்வன் அக்கட்சியில் இருந்து விலகி ஓ.எஸ்.மணியன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.