சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் நகை மோசடி; இளம்பெண் கைது
சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் நகை மோசடி செய்த இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
சென்னை,
சென்னை மாங்காடு அம்பாள் நகரை சேர்ந்தவர் விக்னேஷ் ரோஷன் (வயது 26). இவர் சென்னை கோடம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு தேடினேன். இந்தநிலையில் எனது நண்பர் மூலமாக வளசரவாக்கத்தை சேர்ந்த வித்யா (26) என்ற பெண் எனக்கு அறிமுகமானார். வித்யா, தான் சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றுவதாகவும், தான் பணியாற்றும் படத்தில் நடிப்பதற்கு துணை நடிகர்கள் தேவைப்படுகிறார்கள் என்றும் கூறினார்.
நகை மோசடி
என்னை சினிமாவில் நடிக்க வைப்பதாக அவர் தெரிவித்தார். நானும் அவர் சொல்வதை உண்மை என்று நம்பினேன். இந்த சூழ்நிலையில் அவசரமாக பணம் தேவையென்று வித்யா கூறினார். எனது கழுத்தில் அணிந்திருந்த 1½ பவுன் தங்க சங்கிலியை கழற்றி வித்யாவிடம் கொடுத்தேன். அந்த தங்க சங்கிலியை அடகு வைத்து தேவைப்படும் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று வித்யாவிடம் கூறினேன்.
தங்க சங்கிலியை திருப்பி தருவதாக கூறிய வித்யா திருப்பி தரவில்லை. எனக்கு சினிமாவில் நடிக்கவும் வாய்ப்பு வாங்கிக் கொடுக்கவில்லை. வித்யா என்னை பார்ப்பதை தவிர்த்து வந்தார். அவரைப்பற்றி விசாரித்தபோது, சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி என்னைப்போன்று ஏராளமான இளைஞர்களிடம் நகை மற்றும் பணத்தை மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.
வித்யா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக கோடம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வித்யாவை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.1.20 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story