என்.எல்.சி. 3-வது சுரங்கத்திற்கு எதிர்ப்பு கருப்பு கொடி ஏந்தி கிராம மக்கள் போராட்டம் - கம்மாபுரம் அருகே பரபரப்பு


என்.எல்.சி. 3-வது சுரங்கத்திற்கு எதிர்ப்பு கருப்பு கொடி ஏந்தி கிராம மக்கள் போராட்டம் - கம்மாபுரம் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 20 Dec 2018 3:30 AM IST (Updated: 20 Dec 2018 3:49 AM IST)
t-max-icont-min-icon

என்.எல்.சி.யில் 3-வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கம்மாபுரம் அருகே கருப்பு கொடி ஏந்தி கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கம்மாபுரம், 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ளது என்.எல்.சி. இந்தியா நிறுவனம். இங்குள்ள நிலக்கரி சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் பழுப்பு நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் தனது தேவைக்கு போக, எஞ்சிய நிலக்கரியை பல்வேறு தொழிற்சாலைகளுக்கு நிர்வாகம் விற்பனை செய்து தொடர்ந்து லாபம்ஈட்டி வருகிறது.

இந்த நிலையில் 11.50 மில்லியன் டன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கும் வகையில் 3-வதாக திறந்த வெளி சுரங்கம் அமைக்க நிர்வாகம் முடிவு செய்து இருக்கிறது. இதற்கு விருத்தாசலம் அருகே உள்ள கம்மாபுரம், வீரமுடையாநத்தம், விளக்கப்பாடி, அகரஆலம்பாடி என்று சுமார் 30 கிராமங்களில் 4841.99 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிட்டு, அதற்கான முயற்சியில் என்.எல்.சி. நிர்வாகம் இறங்கி உள்ளது.

ஆனால் இந்த பகுதிகளில் சுரங்கம் அமைக்க கிராம மக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். ‘கோ பேக் என்.எல்.சி.’ என்கிற வாசகத்துடன் கிராமங்களில் பேனர்களை வைத்தும், வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள். இந்த கொடிகளில் என்.எல்.சி. நிர்வாகத்துக்கு எதிரான வாசகங்களும் இடம் பெற்று இருக்கின்றன.

இவ்வாறு எதிர்ப்புகள் வலுத்து வந்த நிலையிலும் நிர்வாகம் நிலத்தை கையகப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. இதனால் நிர்வாகத்திற்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைக்க கிராமங்கள் தோறும் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று பெருந்துரை கிராமத்தில் என்.எல்.சி. நிறுவனத்துக்கு எதிரான ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் என்.எல்.சி. நிறுவனம் தங்களது நிலங்களையும், குடியிருப்புகளையும் கையகப்படுத்தி சுரங்கம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் மற்றும் விவசாயிகள் கையில் கருப்பு கொடியை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்த கம்மாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிராமமக்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து போக வைத்தனர். அப்போது கிராமமக்கள், என்.எல்.சி. நிறுவனம் எங்கள் பகுதி நிலங்களை பறிமுதல் செய்தவதற்கான முயற்சியில் ஈடுபட்டால் பலகட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்து அவர்கள் அமைதியாக கலைந்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story