பாம்பன் தூக்குப்பாலத்தில் பராமரிப்பு பணிகள் தீவிரம்


பாம்பன் தூக்குப்பாலத்தில் பராமரிப்பு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 20 Dec 2018 4:15 AM IST (Updated: 20 Dec 2018 3:57 AM IST)
t-max-icont-min-icon

பாம்பன் தூக்குப்பாலத்தில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது. இம்மாத இறுதிக்குள் ரெயில்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

ராமேசுவரம்,

பாம்பன் ரெயில்வே தூக்குப் பாலத்தில் பராமரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் ரெயில் தூக்குப் பாலத்தில் கடந்த 4–ந் தேதி சில இடங்களில் விரிசல் ஏற்பட்டது. விரிசல் ஏற்பட்ட பகுதி உடனடியாக சீரமைக்கப்பட்டாலும் தூக்குப் பாலத்தை முழுமையாக சீரமைத்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதைத்தொடர்ந்து பாதுகாப்பு கருதி பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில்கள் செல்வது நிறுத்தப்பட்டதுடன் மண்டபம் ரெயில் நிலையம் வரை ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் பாம்பன் ரெயில் தூக்குப் பாலத்தில் கடந்த 2 வாரத்திற்கு மேலாக பராமரிப்பு பணிகள் தீவிரமாகவும்,வேகமாகவும் நடைபெற்று வருகிறது.

தூக்குப் பாலத்தின் தண்டவாளத்தின் அடிப்பகுதியில் உள்ள இரும்பு கம்பிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள கடலுக்குள் 4 இரும்பு தூண்களை அமைத்து தொழிலாளர்கள் தூக்குப்பாலத்தின் மைய பகுதியின் 2 இணைப்புகளிலும் உள்ள துருப்பிடித்த தகடுகளை அகற்றி புதிய தகடுகளை பொருத்தியும், மைய பகுதியின் எடையை அதிகரித்து உறுதி தன்மையை அதிகரிக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபற்றி ரெயில்வே உயர்அதகாரி ஒருவர் கூறியதாவது:– பாம்பன் ரெயில்வே தூக்குப் பாலத்தில் நடந்து வரும் பராமரிப்பு பணி இன்னும் 10 நாட்களுக்குள் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பராமரிப்பு பணிகள் முடிந்த பின்பு இந்த மாத இறுதியில் அல்லது ஜனவரி மாதம் முதல் வாரத்தில் பாம்பன் ரெயில்வே பாலம் வழியாக வழக்கம் போல் ராமேசுவரத்திற்கு ரெயில்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story