வழக்கில் இருந்து பெயரை நீக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்: சப்–இன்ஸ்பெக்டருக்கு 2 ஆண்டு ஜெயில்


வழக்கில் இருந்து பெயரை நீக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்: சப்–இன்ஸ்பெக்டருக்கு 2 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 20 Dec 2018 4:12 AM IST (Updated: 20 Dec 2018 4:12 AM IST)
t-max-icont-min-icon

வழக்கில் இருந்து பெயரை நீக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சப்–இன்ஸ்பெக்டருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

மதுரை சின்ன ராசாக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் பரமேசுவரன். இவருக்கும், உறவினர்களுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. கடந்த 2007–ம் ஆண்டில் இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த பிரச்சினை குறித்து இரு தரப்பினரும் மதுரை ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில் அந்த வழக்கில் இருந்து பரமேசுவரனின் பெயரை நீக்கி விடுவதாக, அவரிடம் அப்போதைய ஒத்தக்கடை சப்–இன்ஸ்பெக்டர் ராஜகோபால் கூறி உள்ளார். இதற்காக தனக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத பரமேசுவரன், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்கள் கொடுத்த ஆலோசனையின்பேரில் மதுரை அய்யர் பங்களாவில் உள்ள ஒரு ஓட்டலில் வைத்து ரசாயன பவுடர் தடவிய ரூ.3 ஆயிரம் லஞ்ச பணத்தை கொடுத்தார். அதை சப்–இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு லஞ்ச ஒழிப்பு வழக்குகளுக்கான மதுரை சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. முடிவில், ராஜகோபால் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி செங்கமலச்செல்வன் நேற்று தீர்ப்பளித்தார்.


Next Story