எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி? பெண்களுக்கு பயிற்சி அளிக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டம்


எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி? பெண்களுக்கு பயிற்சி அளிக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டம்
x
தினத்தந்தி 20 Dec 2018 4:14 AM IST (Updated: 20 Dec 2018 4:14 AM IST)
t-max-icont-min-icon

எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு அளிக்கும் வாகன தொடக்க விழா சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்திய எண்ணெய் நிறுவன அலுவலகத்தில் நடந்தது.

சென்னை, 

 பெட்ரோலிய சிக்கன ஆய்வு மைய நிர்வாக இயக்குனர் அலோக் திரிபாதி கொடியசைத்து வாகனத்தை தொடங்கிவைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கச்சா எண்ணெய் வினியோகத்துக்கும், நமக்கு தேவையான அளவுக்கும் இடையிலான இடைவெளியை குறைத்து எரிபொருள் சேமிப்பு மற்றும் திறன் அதிகரிப்புக்கு மத்திய அரசு அதிக முன்னுரிமை கொடுத்து வருகிறது. பெட்ரோலிய பொருட்களை 41 சதவீதம் போக்குவரத்து துறை கொள்முதல் செய்கிறது. எனவே போக்குவரத்து துறையில் வாகனங்களை முறையாக பயன்படுத்த வேண்டும். இதற்காக போக்குவரத்து துறைகளுடன் இணைந்து பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

பெட்ரோலிய சேமிப்பு என்பது தொழிற்சாலைகள், பொதுமக்கள், நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் அரசின் கூட்டுப்பொறுப்பாகும். எரிபொருள் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு வாகனம் தமிழகத்தில் 75 நாட்களுக்கு 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று விழிப்புணர்வு அளிக்க உள்ளது. எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்தி எவ்வாறு சமையல் செய்வது என்பது குறித்து பெண்களுக்கு பயிற்சி அளிக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story