சென்னையில் 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த டாக்டர் மரணம் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி


சென்னையில் 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த டாக்டர் மரணம் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
x
தினத்தந்தி 20 Dec 2018 4:24 AM IST (Updated: 20 Dec 2018 4:24 AM IST)
t-max-icont-min-icon

சென்னை வண்ணாரப்பேட்டையில் 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த டாக்டர் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

திருவொற்றியூர்,

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை வெங்கடாசலம் தெருவில் வசித்து வந்தவர் டாக்டர் ஜெயச்சந்திரன்(வயது 70). இவரை டாக்டர் ஜெயச்சந்திரன் என்றால் பலருக்கு தெரியாது. ஆனால் ‘5 ரூபாய் டாக்டர்’ என்றால் அனைவரும் அறிவர்.

அந்த அளவுக்கு கடந்த 46 ஆண்டுகளாக 2 ரூபாயில் ஆரம்பித்த மருத்துவம் கடைசியாக 5 ரூபாய் பெற்று, இலவசமாக மருந்துகளும் வழங்கி கை ராசி மருத்துவர் என்ற பெயருடன் திகழ்ந்தார்.

மரணம்

வடசென்னைக்கே புகழ் சேர்த்து வந்த டாக்டர் ஜெயச்சந்திரன், உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் மரணம் அடைந்தார். அவரது உடல் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது.

ஜெயச்சந்திரன் சென்னை அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து பட்டம் பெற்றார். 1972-ல் வண்ணாரப்பேட்டை பகுதியில் சிறியதாக கிளனிக் தொடங்கி மக்களுக்கு 2 ரூபாயில் மருத்துவம் பார்த்தார்.

24 மணி நேரமும் மக் களுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக தனது வீட்டிலேயே கிளனிக்கை தொடங்கினார். இதனால் மக்கள் கூட்டம் குவியத்தொடங்கியது. தன்னிடம் சிகிச்சைக்காக வரும் வயதானவர்களுக்கு ஆட்டோ செலவுக்கு முதற்கொண்டு பணத்தை கொடுத்து அவர்களை பத்திரமாக வழிஅனுப்புவார்.

கண்ணீர் அஞ்சலி

நேற்று அவர் மரணம் அடைந்த செய்தி அறிந்ததும் ஏராளமான பொதுமக்கள் டாக் டர் ஜெயச்சந்திரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த டாக்டர் மரணம் அடைந்தது அந்த பகுதி மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மரணம் அடைந்த ஜெயச்சந்திரனின் மனைவி வேணியும் டாக்டர் ஆவார். மகப்பேறு மருத்துவ நிபுணரான இவர் சென்னை அரசு பொது மருத்துவமனை டீனாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இந்த தம்பதியருக்கு சரத்ராஜ், சரவணராஜ் என 2 மகன்களும் சரண்யா என்று ஒரு மகளும் உள்ளனர். இவர்களும் டாக்டர்கள் ஆவர்.

Next Story