‘பா.ஜனதாவை சேர்ந்த சிலர், பேசுவதை குறைக்க வேண்டும்’ நிதின் கட்காரி கலகலப்பு பேட்டி
பா.ஜனதாவை சேர்ந்த சிலர் பேசுவதை குறைக்க வேண்டும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி கலகலப்பாக பேட்டி அளித்தார்.
மும்பை,
பா.ஜனதாவை சேர்ந்த சிலர் பேசுவதை குறைக்க வேண்டும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி கலகலப்பாக பேட்டி அளித்தார்.
வாயில் துணியை சுற்ற வேண்டும்
மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி நேற்று மும்பையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது ரபேல் விவகாரத்தில் ஒரே நாளில் 70 முறை செய்தியாளர் சந்திப்பை பா.ஜனதாவினர் நடத்தியது ஏன்? என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த கட்காரி, ‘எங்களிடம் ஏராளமான தலைவர்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்க விரும்புகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு சில பணிகளை நாங்கள் கொடுக்க வேண்டும். ‘பாம்பே டூ கோவா’ என்ற திரைப்படத்தில், எப்போதும் சாப்பிடும் வேட்கை கொண்ட ஒரு குழந்தை, அடிக்கடி உணவு உண்பதை தடுப்பதற்காக அதன் வாயில் ஒரு துணி சுற்றப்பட்டு இருக்கும். அதைப்போல எங்கள் கட்சியை சேர்ந்த சிலரின் வாயிலும் துணியை சுற்ற வேண்டிய தேவை இருக்கிறது’ என்று கூறினார்.
நகைச்சுவையாக தெரிவித்தேன்
அப்போது குறுக்கிட்ட செய்தியாளர், ‘சமீபத்தில் அனுமனின் சாதி குறித்தும் (யோகி ஆதித்யநாத்), ராகுல் காந்தியின் கோத்திரம் குறித்தும் (உத்தரபிரதேச பா.ஜனதா தலைவர்) பா.ஜனதாவினர் குறிப்பிட்டதை குறித்து இவ்வாறு பேசுகிறீர்களா?’ என்று வினவினார்.
அதற்கு பதிலளித்த கட்காரி, ‘இதை நான் நகைச்சுவையாகத்தான் கூறினேன். எனினும் அரசியல்வாதிகள் ஊடகத்திடம் அதிகம் பேசுவதை குறைக்க வேண்டும். இந்த கொள்கை பா.ஜனதாவுக்கு கொஞ்சம் அதிகம் தேவைப்படுகிறது’ என்றும் குறிப்பிட்டார்.
1971-ம் ஆண்டு இந்திரா காந்தியை பல கட்சிகள் ஒன்று சேர்ந்து எதிர்த்தன. அப்போது இந்திரா காந்தி வெற்றி பெற்றது போல, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மோடி தலைமையிலான பா.ஜனதா வெற்றி பெறும் என்றும் நிதின் கட்காரி கூறினார்.
Related Tags :
Next Story