புதுவையில் பூட்டிய வீட்டுக்குள் கழுத்து அறுக்கப்பட்டு கிடந்தவர்; புதுப்பெண் கற்பழித்து கொலையானது அம்பலம்
பூட்டிய வீட்டுக்குள் புதுப்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்த விவகாரத்தில் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
புதுச்சேரி,
புதுச்சேரி குயவர்பாளையம் நல்ல தண்ணீர் கிணறு பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவரது மனைவி அகிலாண்டேஸ்வரி. இவர்களது 2–வது மகள் அம்சபிரபா (வயது 25). தேசிய வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தார். பூபதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
அகிலாண்டேஸ்வரியும், மகள் அம்சபிரபாவும் குயவர்பாளையத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். அம்சபிரபா தன்னுடன் கல்லூரியில் படித்த விஜயகுமார் என்பவரை காதலித்து வந்தார். காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து அடுத்த மாதம் (ஜனவரி) 27–ந் தேதி இவர்களது திருமணம் நடைபெற இருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் தனியாக இருந்த அம்சபிரபா பூட்டிய வீட்டிற்குள் கழுத்து அறுக்கப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். அதனை பார்த்த அகிலாண்டேஸ்வரி அருகில் உள்ளவர்கள் உதவியுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தநிலையில் புதுப்பெண்ணான அம்சபிரபா கழுத்து அறுக்கப்பட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம், சப்–இன்ஸ்பெக்டர் நியூட்டன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
நேற்று மதியம் அவரது உடல் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையின் முடிவில் அம்சபிரபா கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்த வழக்கு தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரித்தனர். அவரது வீட்டில் நடத்திய சோதனையில் கஞ்சா இருப்பது தெரியவந்தது போதையில் அந்த வாலிபர் புதுப்பெண் அம்சபிரபாவை கற்பழித்து கொலை செய்து இருக்க வேண்டும் என்று தெரிகிறது. வீட்டின் சாவியை எடுத்து வெளிப்புறமாக பூட்டி விட்டு அவர் தப்பிச் சென்று இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் அவரிடம் நடத்தும் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.