வேலூர் அருகே அருள்வாக்கு கூறிய பெண்ணின் மகள் கழுத்தறுத்து கொலை கூலிதொழிலாளி கைது
வேலூர் அருகே அருள்வாக்கு கூறிய பெண்ணின் மகள் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கூலிதொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
வேலூர்,
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
வேலூரை அடுத்த புலிமேடு இந்திரா நகரை சேர்ந்தவர் சின்னபையன். இவருடைய மனைவி கஸ்தூரி. இவர்களின் மகள் சுகன்யா (வயது 24) 10–ம் வகுப்புவரை படித்து விட்டு, கூலிவேலை செய்து வந்தார். நேற்று காலை சுகன்யா அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்துக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றார். இந்த நிலையில் 11 மணியளவில் அவர் அதேபகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவரது வீட்டின் கழிவறையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து மோப்பநாய் சிம்பா அங்கு வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் அங்கிருந்து சிறிது தொலைவு ஓடிச்சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதையடுத்து போலீசார் சுகன்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகன்யா குடும்பத்தினர் மற்றும் கொலை நடந்த பகுதியில் வசிப்பவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘சுகன்யாவின் தாயார் கஸ்தூரி அருள்வாக்கு கூறுபவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அப்பகுதி மக்கள் ஊருக்கு பொதுவாக கோவில் ஒன்று கட்ட வேண்டும். அதற்கு இடம் கூற வேண்டும் என்று கஸ்தூரியிடம் கேட்டுள்ளனர்.
அப்போது அவர் அப்பகுதியை சேர்ந்த கணேசன் வீட்டின் எதிரேயுள்ள பொதுஇடத்தில் கோவில் கட்டும்படி அருள்வாக்கு கூறிஉள்ளார். கஸ்தூரி கூறிய இடத்தில் கணேசன் குடும்பத்தினர் ஆடுகள் கட்டி வளர்த்து வந்துள்ளனர். எனவே அங்கு கோவில் கட்டுவதற்கு கணேசன் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக கணேசன் குடும்பத்தினருக்கும், சின்னபையன் குடும்பத்தினருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கணேசன் குடும்பத்தினர் வளர்த்த ஆடு ஒன்று இறந்தது. அதற்கு கோவில் கட்ட இடம் கொடுக்காமல், அங்கு ஆடுகள் கட்டியது தான் காரணம் என்று சுகன்யா கூறியதாக தெரிகிறது.
அதனால் ஆத்திரம் அடைந்த கணேசன் மகன் கூலிதொழிலாளி விஜய் (19) நேற்று வேலைக்கு சென்ற சுகன்யா வழிமடக்கி கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் விஜயை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.