90 துறவிகளுடன் ஜெயின் குரு ஆச்சார்யா மஹாஷ்ரமண், திருவண்ணாமலைக்கு வருகை 3 நோக்கங்கள் குறித்து உறுதிமொழி ஏற்பு
ஜெயின் குரு ஆச்சார்யா மஹாஷ்ரமண் 90 துறவிகளுடன் திருவண்ணாமலைக்கு நேற்று வந்தார். இங்கு நடந்த நிகழ்ச்சியில் நல்ல எண்ணம், போதைவிடுப்பு, நல்லொழுக்கம் ஆகிய 3 நோக்கங்கள் குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.
திருவண்ணாமலை,
ஜெயின் குரு ஆச்சார்யா மஹாஷ்ரமண், அகிம்சை யாத்திரையாக திருவண்ணாமலைக்கு நேற்று வந்தார். இந்த அகிம்சை யாத்திரையில், மக்கள் மத்தியில் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், போதை விடுப்பு ஆகிய 3 கொள்கைகள் வலியுறுத்தப்படுகிறது. இதுவரை அவர் மனிதநேய நலனுக்காக 44 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் புனித யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
இவர் நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூருக்கு வந்தார். அவருடன் 43 ஆண் துறவிகளும், 47 பெண் துறவிகளும் என 90 துறவிகள் வந்தனர். இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் இருந்து துறவறம் பூண்ட சாயர் குடும்பத்தை சேர்ந்த பிரக்ஷா, சுவேதா ஆகியோரும் வந்தனர்.
பின்னர் துறவிகளுடன்அவர் சிறுநாத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் தங்கினார். தொடர்ந்து அவர்கள் நேற்று காலை திருவண்ணாமலைக்கு வந்தனர். திண்டிவனம் சாலையில் உள்ள கூட்ரோட்டில் ஜெயின் குரு ஆச்சார்யா மஹாஷ்ரமண் தலைமையில் வந்த துறவிகளுக்கு கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் திண்டிவனம் சாலையில் உள்ள உலக மாதா ஆலயம் அருகில் ஜெயின் குருவுக்கு வி.டி.எஸ். ஜெயின் பள்ளி என்.சி.சி. மாணவர்களின் சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. மேலும் ஜெயின் துறவிகள் வரும் வழி எங்கும் மற்றும் பிற மதங்களை சேர்ந்தவர்களும் மரியாதை செய்தனர்.
இதையடுத்து திருவண்ணாமலை காந்தி நகரில் உள்ள வி.டி.எஸ். ஜெயின் பள்ளியில் காலை 10 மணியளவில் ஆச்சார்யா மஹாஷ்ரமண் அருளாசி உரை நிகழ்த்தினார். இதில் ஜெயின் சமூகத்தினர் மட்டுமின்றி பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
இதில் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், போதை விடுப்பு ஆகியவை குறித்து ஜெயின் குரு முன்னிலையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. துறவறம் பூண்ட சாயர் குடும்பத்தை சேர்ந்த பிரக்ஷா, சுவேதா ஆகியோர் அதன்பின்னர் பேசினர்.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர்கள் அக்ரி எஸ்.கிருஷ்ணமூர்த்தி, முக்கூர் சுப்பிரமணியன் மற்றும் அ.தி.மு.க., தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து திருவண்ணாமலை கோபால் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள சாயர் டி.கவுதம்குமார், சாயர் சம்பத்தி இல்லத்திற்கு ஆச்சார்யா மஹாஷ்ரமண் தலைமையிலான துறவிகள் சென்றனர். பின்னர் அங்கும் அருளாசி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் ஜெயின் ஸ்வேதாம்பர் தேராபந்த் சங்கத்தலைவர் அரவிந்த்குமார், செயலாளர் சுரேந்தர்குமார், ஜெயின்தேரா பந்த் யுத்பரிஷத் தலைவர் தீபக்குமார், ஒருங்கிணைப்பாளர்கள் ஆசிஸ்குமார், திலீப்குமார், ஜெயின் சங்க மாநில துணைத்தலைவர் கவுதம்குமார், மகாவீர்குமார், விவேக்குமார், தர்ஷன்குமார், வி.டி.எஸ். ஜெயின் பள்ளி தாளாளர் பவன்குமார், செயலாளர் வசந்த்குமார், அறக்கட்டளை உறுப்பினர்கள் ஜெய்சந்த், ராஜேந்திரகுமார், டி.வி.சுதர்சன், நரேந்திரகுமார், ஸ்ரீஹன்ஸ்குமார், சுரேந்திரகுமார் மற்றும் ஜெயின் சமூகத்தினர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story