கிருஷ்ணகிரியில் கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரதம்


கிருஷ்ணகிரியில் கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 21 Dec 2018 3:30 AM IST (Updated: 20 Dec 2018 9:47 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி, 

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில், 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பூபதி முன்னிலை வகித்தார். வட்ட தலைவர் பிச்சுமணி வரவேற்றார். மாநில பிரசார செயலாளர் ஜார்ஜ் பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பிரதாப் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.

உண்ணாவிரதத்தில் எம்.ஏ.சி.பி.எஸ். திட்ட ஊதிய விகிதத்தை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நடைமுறைப்படுத்த வேண்டும். பயணப்படியை அடிப்படை ஊதியத்தில் 5 சதவீதம் வழங்கிட வேண்டும். பேரிடர் மேலாண்மை பணிகளை செய்யும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தனி ஊதியம் வழங்கிட வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணிவரன்முறைக்கான ஆணைகளை உடனே வழங்க வேண்டும்.

கூடுதலாக கிராமத்திற்கு பணி செய்யும் காலம் முழுமைக்கும் பொறுப்பூதியம் வழங்க வேண்டும். மாவட்ட மாறுதல் மற்றும் உட்கோட்டம் மாறுதல் கோரிய அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் உடனடியாக மாறுதல் வழங்கிட வேண்டும். சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

21 மாத ஊதிய உயர்வு நிலுவை தொகையை உடனே வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், கிருஷ்ணகிரி, பர்கூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி ஆகிய தாலுகாக்களை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story