தொகுப்பு நிதி பெற்றதும் ரூ.2.60 கோடி பண்ணை எந்திரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கலெக்டர் பிரபாகர் தகவல்


தொகுப்பு நிதி பெற்றதும் ரூ.2.60 கோடி பண்ணை எந்திரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கலெக்டர் பிரபாகர் தகவல்
x
தினத்தந்தி 21 Dec 2018 4:00 AM IST (Updated: 20 Dec 2018 9:50 PM IST)
t-max-icont-min-icon

தொகுப்பு நிதி பெற்றதும் ரூ.2.60 கோடி மதிப்பில் விவசாயிகளுக்கு தேவையான பண்ணை எந்திரங்கள் வழங்கப்படும் என்று கலெக்டர் பிரபாகர் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் கூட்டுப்பண்ணை திட்டத்தின்கீழ் உழவர் உற்பத்தியாளர் குழு பொறுப்பாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியின் தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி, பயிற்சியை தொடங்கி வைத்தார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மோகன்விஜயகுமார் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:- தமிழக அரசு விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான திட்டம் தான் கூட்டுப்பண்ணையத்திட்டம் ஆகும். இந்த திட்டம் 2017-18-ம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேளாண்மை துறை மூலம் 225 உழவர் ஆர்வலர் குழுவும், தோட்டக்கலை துறை மூலம் 135 உழவர் ஆர்வலர் குழுவும் ஆரம்பிக்கப்பட்டது. 225 உழவர் ஆர்வலர் குழுக்கள் மூலம் ரூ. 23 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பில் வேளாண் இடுப்பொருட்கள் கூட்டுக்கொள்முதல் செய்யப்பட்டது.

அத்துடன் வேளாண்மை துறை மூலம் 45 உழவர் உற்பத்தியாளர் குழுவும், தோட்டக்கலைத்துறை மூலம் 27 உழவர் உற்பத்தி குழுவும் தொடங்கப்பட்டு, குழு ஒன்றிற்கு ரூ. 5 லட்சம் என தொகுப்பு நிதியில் ரூ. 3 கோடியே 60 லட்சத்திற்கு வேளாண் கருவிகளான டிராக்டர், மினி டிராக்டர், ரோட்டாவேட்டர், பவர் டில்லர், பவர் வீடல், களை எடுக்கும் கருவி, கதிரடிக்கும் எந்திரம், நெல் அறுவடை எந்திரம் போன்ற வேளாண் கருவிகளை வாங்கி விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

2018-19-ம் ஆண்டில் நமது மாவட்டத்தில் வேளாண்மை துறையின் மூலம் 260 உழவர் ஆர்வலர் குழுக்கள் தொடங்கப்பட்டு, விவசாயிகள் பங்குத்தொகையை செலுத்தி வங்கி கணக்கை தொடங்கி உள்ளனர். மேலும் வேளாண்மை துறை மூலம் 52 உழவர் ஆர்வலர் குழு தொடங்கப்பட்டு, மாதந்தோறும் கூட்டங்கள் நடத்தப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றி வருகின்றனர். தொகுப்பு நிதி பெறப்பட்டவுடன் ரூ. 2 கோடியே 60 லட்சம் மதிப்பில் விவசாயிகளுக்கு தேவையான பண்ணை எந்திரங்கள் வழங்கப்படும். இந்த ஆண்டு கூட்டுப்பண்ணைய திட்டத்தில் விவசாயிகள் ரூ. 26 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பில் இடுபொருட்கள் கூட்டாக கொள்முதல் செய்துள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ராஜேந்திரன், கிருஷ்ணகிரி தோட்டக்கலை அலுவலர் வானிலரசு, வேளாண்மை அலுவலர்கள் அருள்தாஸ், வானதி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் அன்பு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டுப்பண்ணையம் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சியை கூட்டுப்பண்ணைய திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் வடிவேல் வழங்கினார். தொடர்ந்து விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. முடிவில், கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பச்சையப்பன் நன்றி கூறினார்.

Next Story