நாமக்கல்லில், 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரதம்
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் நேற்று 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
நாமக்கல்,
நாமக்கல் பூங்கா சாலையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.
கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயணப்படியை அடிப்படை ஊதியத்தில் 5 சதவீதம் உயர்த்தி வழங்கிட வேண்டும். பேரிடர் மேலாண்மை பணிகளை செய்யும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தனி ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அம்மா திட்ட செலவின நிலுவைத்தொகை மற்றும் இணையதள செலவின நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உடனடியாக மடிக் கணினி வழங்க வேண்டும். பொங்கல் வேட்டி-சேலைகளை ரேஷன்கடைகள் மூலமே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன் வரவேற்று பேசினார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் பழனியப்பன், நடராஜன், சிவஞானம் ஆகியோர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தனர். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் மாலை 4 மணிக்கு முடிவடைந்தது.
முன்னாள் வட்ட தலைவர்கள் சுப்பிரமணியம், தர்மலிங்கம் ஆகியோர் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் தினேஷ்குமார் நன்றி கூறினார்.
இதேபோல் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு மின்சாரம், கழிப்பறை மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை வழங்க வேண்டும். மாவட்ட மாறுதல்களை ஒரே அரசாணை மூலம் உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கடந்த 10-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இவர்களின் போராட்டம் நேற்றும் நீடித்தது.
இதையொட்டி கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ராஜ்குமார் வரவேற்று பேசினார். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஈரோடு மாவட்ட தலைவர் பழனிசாமி, பொருளாளர் சதீஷ்கமல், ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்பாபு உள்பட திரளான கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story