தேவாரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மேலாளரை கண்டித்து ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
தேவாரம் அரசு போக்கு வரத்துகழக பணிமனையில், போக்குவரத்து ஊழியர்கள் திடீரென மேலாளரை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேவாரம்,
தேவாரம் போலீஸ் நிலையம் அருகே அரசு போக்கு வரத்துகழக பணிமனை உள்ளது. இங்கு மொத்தம் 24 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தேவாரத்தில் இருந்து திண்டுக்கல், திருச்சி, மதுரை, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட தொலை தூர பகுதிகளுக்கும் கம்பம், போடி, சின்னமனூர் போன்ற பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்தநிலையில் பணிமனையின் மேலாளர் ஊழியர்களுக்கு கூடுதல் பணிக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு ஊதியம் இனி வழங்கப்படமாட்டாது என்று கூறியதாக தெரிகிறது. இதற்கு ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து டிரைவர், மற்றும் கண்டக்டர்கள் பஸ்களை இயக்காமல் பணிமனையிலே நிறுத்தி நேற்று அதிகாலை 5 மணி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பஸ்கள் அனைத்தும் பணிமனையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. தேவாரம் பணிமனை பஸ்கள் இயக்கப்படாததால் பஸ் போக்குவரத்து குறைந்தது. இதனால் காலை நேரத்தில் தினசரி பஸ்களில் சென்றுவந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிப்பு அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேனி கோட்ட மேலாளர்கள் பாண்டியராஜன், சுப்பிரமணி ஆகியோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை அழைத்து பேசினார்கள். ஆனால் அதில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இதையடுத்து காலை 10 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஊழியர்களுக்கு பழைய முறைப்படி கூடுதல் பணிக்கு சிறப்பு தொகை வழங்கப்படும். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய போராட்டம் காலை 10.30 மணிக்கு முடிவுக்கு வந்தது.
Related Tags :
Next Story