ஆத்தூர் அருகே, 54 ஆண்டுகளுக்கு முன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட செல்லியம்மன் சிலை கண்டெடுப்பு அகல்விளக்கேற்றி பெண்கள் வழிபாடு
ஆத்தூர் அருகே, 54 ஆண்டுகளுக்கு முன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட செல்லியம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. பெண்கள் அகல்விளக்கேற்றி வழிபட்டனர்.
ஆத்தூர்,
ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் வசிஷ்ட நதிக்கரையோரம் விவசாயிகள் கிணறு தோண்டி அதன் மூலம் விவசாயம் செய்து வருகிறார்கள். அந்த பழமையான கிணற்றை தூர் வார விவசாயிகள் முடிவு செய்தனர். இதையடுத்து தூர்வாரும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று காலையில் கிணற்றில் தொழிலாளர்கள் இறங்கி தூர்வாரிக் கொண்டு இருந்தனர். அப்போது சுமார் ஒன்றரை அடி உயரம் கொண்ட சிலை இருந்ததை கண்டெடுத்தனர்.
பின்னர் அந்த சிலையை ஊர்மக்கள் வந்து பார்வையிட்டனர். இதுபற்றி அந்த ஊர் பெரியவர்கள் கூறும்போது, அம்மம்பாளையம் வசிஷ்ட நதிக்கரையோரம் சுமார் 54 ஆண்டுகளுக்கு முன்பு செல்லியம்மன் கோவில் இருந்தது. கடந்த 1964-ம் ஆண்டு வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது கோவில் கட்டிடம் சேதம் அடைந்தது. அங்கிருந்த செல்லியம்மன் சிலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அந்த சிலை தான் இது, என்றனர்.
இதை அறிந்ததும் கிணற்றின் அருகில் மக்கள் திரண்டனர். பின்னர் அந்த சிலையை எடுத்து அம்மம்பாளையம் தேர்முட்டி பகுதிக்கு கொண்டு வந்தனர். அங்கு சிலையை வைத்து பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். பெண்கள் அகல்விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினார்கள். நேற்று மாலையிலும் அங்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
54 ஆண்டுகளுக்கு பின்னர் செல்லியம்மன் சிலை கிடைத்ததால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story