திருமண உதவித்தொகை கேட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


திருமண உதவித்தொகை கேட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 20 Dec 2018 10:15 PM GMT (Updated: 20 Dec 2018 5:14 PM GMT)

திருமண உதவித்தொகை கேட்டு சேலம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

ஓமலூர், எடப்பாடி, தாரமங்கலம், பனமரத்துப்பட்டி, வீரபாண்டி, அயோத்தியாப்பட்டணம், ஏற்காடு உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். இவர்கள் அனைவரும் தாலிக்கு தங்கம் திட்டம் மூலம் திருமண உதவித்தொகை பெறுவதற்கான டோக்கன் வைத்திருந்தனர். பின்னர் அவர்கள் திருமண உதவித்தொகை பெறுவதற்காக சமூக நலத்துறை அலுவலகத்திற்கு சென்றனர்.

அப்போது அங்கிருந்த அதிகாரிகள், அவர்களிடம் இன்று (நேற்று) திருமண உதவித்தொகை வழங்கப்படவில்லை என்றும், வருகிற 24-ந் தேதி அந்தந்த ஊராட்சிகளில் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர். மேலும் பொதுமக்களிடம் இருந்து கையெழுத்து பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து பொதுமக்கள் திடீரென திருமண உதவித்தொகை கேட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களிடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் திருமண உதவித்தொகை கண்டிப்பாக வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததின் பேரில் அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

திருமண உதவித்தொகை பெறுவதற்காக விண்ணப்பித்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை வழங்கப்படவில்லை. இதற்காக ஆயிரக் கணக்கான ரூபாய் செலவழித்து உள்ளோம். கலெக்டர் அலுவலகத்தில் திருமண உதவித்தொகை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இங்கு வந்துள்ளோம்.

அதே நேரத்தில் அதிகாரிகள் திருமண உதவித்தொகை 24-ந் தேதி தருவதாக கூறியதுடன், முத்திரை பதித்த பேப்பரில் கையெழுத்தை பெற்றுவிட்டனர். தங்க நாணயம் வழங்காமல் எதற்காக அதிகாரிகள் ஸ்டாம்ப் பதித்த பேப்பரில் கையெழுத்து வாங்கினார்கள்? என்று தெரியவில்லை. இது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தாரமங்கலத்தை சேர்ந்த ஜீவிதா என்ற பெண் தனது 1½ வயது மகனுடன் வந்தார். அவர் இதுகுறித்து கூறும் போது, ‘எனது திருமணத்திற்காக உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தேன். எனக்கு குழந்தை பிறந்து 1½ வயது ஆகிவிட்டது. ஆனால் இதுவரை திருமண உதவித்தொகை வழங்காதது வேதனை அளிக்கிறது. உடனடியாக உதவித்தொகை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்றார்.

இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் கூறும் போது, ‘ஏற்காடு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் விடுப்பட்ட பயனாளிகளுக்கு தான் இன்று(நேற்று) திருமண உதவித்தொகை வழங்குவதாக கூறி இருந்தோம். சான்றிதழை சரிப்பார்ப்பதற்கு தான் கையெழுத்தை பெற்றுள்ளோம். வழக்கமாக தங்க நாணயத்துடன் இணைந்து இருக்கும் நம்பரை நாங்கள் பதிவு செய்தால் தான் பயனாளிகளுக்கு வழங்கியதாக அர்த்தம் ஆகும். முறைகேடு எதுவும் நாங்கள் செய்யவில்லை. எனவே பயனாளிகள் யாரும் அச்சப்பட தேவையில்லை. விண்ணப்பித்த அனைவருக்கும் விரைவில் திருமண உதவித்தொகை வழங்கப்படும்‘ என்றனர்.

Next Story