மோட்டார் சைக்கிளில் சென்றபோது பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் சாவு நாய் குறுக்கே வந்ததால் பரிதாபம்


மோட்டார் சைக்கிளில் சென்றபோது பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் சாவு நாய் குறுக்கே வந்ததால் பரிதாபம்
x
தினத்தந்தி 21 Dec 2018 3:30 AM IST (Updated: 20 Dec 2018 10:47 PM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது நாய் குறுக்கே வந்ததால் பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சேலம்,

சேலம் கன்னங்குறிச்சி கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவருடைய மகன் தேவராஜ் (வயது 23). இவர் 4 ரோடு பகுதியில் உள்ள ஒரு பிரபல துணிக்கடையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் தேவராஜ் நேற்று உறவினர் ஒருவரை பார்க்க மோட்டார் சைக்கிளில் 4 ரோடு வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிள் முன்னே திடீரென ஒரு நாய் குறுக்கே ஓடியது. இதனால் தேவராஜ் நாயின் மீது மோதிவிடாமல் இருக்க பிரேக் போட்டார். அப்போது அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி ஆத்தூரில் இருந்து புதிய பஸ்நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் சக்கரத்திற்குள் விழுந்து விட்டார். பஸ் தேவராஜ் தலை மீது ஏறி இறங்கியது. இதில் மூளை சிதறி சம்பவ இடத்திலேயே தேவராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த பள்ளப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை போலீசார் சரிசெய்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சேலத்தில் நாய் குறுக்கே வந்ததால் விபத்தில் சிக்கி வாலிபர் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story