மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்து: மேலும் ஒரு சிறுமி சாவு இழப்பீடு வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலைமறியல்


மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்து: மேலும் ஒரு சிறுமி சாவு இழப்பீடு வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 21 Dec 2018 4:00 AM IST (Updated: 20 Dec 2018 11:22 PM IST)
t-max-icont-min-icon

சுங்குவார்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது மணல் லாரி மோதிய விபத்தில் தந்தை, மகன் பலியானர்கள். மேலும் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த சிறுமியும் உயிரிழந்தாள். இழப்பீடு வழங்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஸ்ரீபெரும்புதூர்,

சுங்குவார்சத்திரத்தை அடுத்த கோவலவேடு, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 35). இவரது மகன்கள் லோகேஷ் (13), காமேஷ்வரன் (12). இருவரும் குன்னம் அரசு பள்ளியில் படித்து வந்தனர். அவர்களை சேகர் கடந்த 14-ந் தேதி காலை பள்ளி செல்ல தன்னுடைய மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்றார்.

அப்போது குன்னம் அருகே அதே பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் சேகரின் தங்கை மகள் தனலட்சுமி(11) சாலையோரம் நடந்து சென்றார். தனலட்சுமியை தன்னுடைய மோட்டார் சைக்கிளில் ஏற்றி செல்வதற்காக சேகர் சாலை ஓரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

அப்போது அதிவேகமாக வந்த மணல் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் சேகர், லோகேஷ், காமேஷ்வரன், தனலட்சுமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சேகரும், லோகேசும் பரிதாபமாக இறந்தனர். காமேஷ்வரன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

இந்த நிலையில் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தனலட்சுமி சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந் தார். குன்னம் பகுதியில் மருந்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. அங்கு இருந்து வெளிவந்த மற்றொரு மோட்டார் சைக்கிளால் விபத்து ஏற்பட்டது.

இதனால்தான் 3 பேர் பலியாக காரணம் என கூறி இறந்தவர்களின் உறவினர்கள், கிராம மக்கள், அந்த பகுதி தி.மு.க.வினர், பாட்டாளி மக்கள் கட்சியினர் இழப்பீடு வழங்க வேண்டும் என நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் திடீரென சுங்குவார்சத்திரம்-வாலாஜாபாத் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சுங்குவார்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story