தியாகதுருகம் அருகே, குடும்பத்தகராறில் விஷ கிழங்கை தின்று தொழிலாளி தற்கொலை - விளையாட்டாக தின்ற வாலிபருக்கு தீவிர சிகிச்சை


தியாகதுருகம் அருகே, குடும்பத்தகராறில் விஷ கிழங்கை தின்று தொழிலாளி தற்கொலை - விளையாட்டாக தின்ற வாலிபருக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 21 Dec 2018 3:45 AM IST (Updated: 20 Dec 2018 11:42 PM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் அருகே குடும்பத்தகராறு காரணமாக விஷ கிழங்கை தின்று தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். அதனை விளையாட்டாக தின்ற வாலிபருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

கண்டாச்சிமங்கலம்,

விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள திம்மலை ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் தங்கராசு மகன் முருகன் (வயது 41), செங்கல் சூளை தொழிலாளி. இவரது மனைவி அமுதா(36). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை முருகனுக்கும் அமுதாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த முருகன் வீட்டில் இருந்து வெளியேறி அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார். பின்னர் அவர் அங்கு வளர்ந்திருந்த விஷ கிழங்கை (கண் வல்லி கிழங்கு) பிடுங்கி, அதில் பாதி அளவு தின்றார்.

இதையடுத்து மீதியிருந்த கிழங்குடன் முருகன் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது அவர் வீட்டில் இருந்தவர்களிடம் தான் விஷ கிழங்கை தின்று விட்டதாக கூறினார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அமுதா மற்றும் உறவினர்கள் முருகனை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே முருகன் மயங்கி விழுந்தது பற்றி அறிந்த அதே பகுதியை சேர்ந்த அரிச்சந்திரன் மகன் ராமச்சந்திரன்(24) என்பவர், முருகனின் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் இருந்த விஷ கிழங்கை ராமச்சந்திரன் எடுத்து, இந்த கிழங்கு ஒன்றும் செய்யாது என்று கூறியபடி விளையாட்டுத்தனமாக சிறிதளவு தின்றதாக தெரிகிறது.

இதையடுத்து ராமச்சந்திரன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இருந்த முருகனை பார்க்க சென்றார். மருத்துவமனைக்கு சென்ற சிறிது நேரத்திலேயே ராமச்சந்திரனுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. உடனே அவரை உறவினர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே முருகன் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் தொழிலாளி விஷ கிழங்கை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story