துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி அரசு கல்லூரி மாணவி கொலை; கிணற்றில் உடல் வீச்சு போலீசார் விசாரணை


துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி அரசு கல்லூரி மாணவி கொலை; கிணற்றில் உடல் வீச்சு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 21 Dec 2018 4:45 AM IST (Updated: 21 Dec 2018 12:15 AM IST)
t-max-icont-min-icon

கந்தர்வகோட்டை அருகே கல்லூரி மாணவியை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்று, பிணத்தை கிணற்றில் வீசிச்சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையை அடுத்த வளச்சேரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்லதுரை. இவருடைய மகள் ஆர்த்தி(வயது 19). இவர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தினமும் வளச்சேரிப்பட்டியில் இருந்து கறம்பக்குடி வழியாக பஸ்சில் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம்.

அதேபோல் நேற்று கல்லூரிக்கு செல்வதற்காக அதிகாலை 5.30 மணியளவில் வீட்டில் இருந்து அப்பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு ஆர்த்தி நடந்து சென்றார்.

இந்நிலையில் காலை 7.30 மணியளவில் ஆர்த்தி வீட்டின் அருகே உள்ள வீட்டை சேர்ந்த ஒரு பெண், தண்ணீர் எடுப்பதற்காக பஸ் நிறுத்தத்திற்கு செல்லும் வழியில் உள்ள கிணற்றுக்கு சென்றார். அப்போது கிணற்றுக்குள் ஆர்த்தி பிணமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து, கூச்சலிட்டார்.

இதையறிந்து பொதுமக்கள் அங்கு திரண்டனர். ஆர்த்தியின் குடும்பத்தினரும், கந்தர்வகோட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினரும் அங்கு வந்தனர். தீயணைப்பு வீரர்கள் உடலில் கயிற்றை கட்டி, கிணற்றுக்குள் இறங்கி ஆர்த்தியின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

அப்போது ஆர்த்தியின் கழுத்தில், அவர் அணிந்திருந்த துப்பட்டாவால் சுற்றி இறுக்கப்பட்டிருந்தது. தலைமுடியும் வெட்டப்பட்டிருந்து. அவருடைய உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுத காட்சி, அருகில் இருந்தவர்களையும் கண்கலங்க செய்தது.

இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம் மற்றும் கந்தர்வகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர் மன்னன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, ஆர்த்தியின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், வீட்டில் இருந்து பஸ் நிறுத்தத்திற்கு சென்ற ஆர்த்தியை, வழியில் மர்ம நபர்கள் மடக்கி துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்று, பிணத்தை கிணற்றில் வீசியது, தெரியவந்தது.

சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. ஆர்த்தியின் உடல் கிடந்த கிணற்று பகுதியில் இருந்து மோப்பம் பிடித்தபடி ஓடிய நாய் சிறிது தூரத்தில் நின்றுவிட்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதையடுத்து ஆர்த்தியின் உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்த னர். மேலும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார், ஆர்த்தியை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டு கிணற்றில் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story