திருச்சி விமான நிலையத்தில் ரூ.7 லட்சம் கடத்தல் தங்க நகைகள்- வெளிநாட்டு பணம் பறிமுதல்


திருச்சி விமான நிலையத்தில் ரூ.7 லட்சம் கடத்தல் தங்க நகைகள்- வெளிநாட்டு பணம் பறிமுதல்
x
தினத்தந்தி 21 Dec 2018 4:30 AM IST (Updated: 21 Dec 2018 12:36 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.7 லட்சம் தங்க நகைகள் மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக திருவாரூரை சேர்ந்தவர் உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி,

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தினமும் சிங்கப்பூர், மலேசிய தலைநகர் கோலாலம்பூர், துபாய், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னைக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் 24 மணி நேரமும் திருச்சி விமான நிலையம் விழிப்புடனே இருக்கும்.

வெளிநாட்டில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் அவ்வப்போது தங்களுடைய உடைமைகளில் மறைத்து தங்கம், வெளிநாட்டு பணம் மற்றும் அரியவகை உயிரினங்கள் கடத்தி வரும்போது சோதனையில் சிக்குகிறார்கள். மேலும் சில விமான நிலைய அதிகாரிகள், ஊழியர்களே கடத்தலுக்கு துணைபோனது கடந்த சில மாதங்களுக்கு முன்பு சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையில் கண்டறியப்பட்டு, அவர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவமும் நடந்தது. அதைத்தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் சோதனை கடுமையாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தனியார் விமானம் நேற்று முன்தினம் இரவு வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். மதுரையை சேர்ந்த மல்லிகா சண்முகம் என்ற பெண்ணிடம் சோதனை செய்தபோது, அவர் உடலில் சங்கிலி, வளையல்கள் என 235 கிராம் தங்கநகைகளை மறைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அவற்றின் மதிப்பு ரூ.6 லட்சத்து 97 ஆயிரம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக மல்லிகா சண்முகத்திடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் திருச்சியில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர் ஏசியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. விமானத்தில் செல்ல தயாரான பயணிகளிடம் மத்திய வான் நுண்ணறிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது திருவாரூரை சேர்ந்த ரமேஷ்மாசிலாமணி என்பவர் தனது சூட்கேசில் வெளிநாட்டு பணத்தை (அமெரிக்க டாலர்கள்) மறைத்து எடுத்து செல்ல முயன்றது தெரியவந்தது. அவற்றின் இந்திய மதிப்பு ரூ.2 லட்சத்து 45 ஆயிரம் ஆகும்.

அதிகாரிகள் ரமேஷ்மாசிலாமணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story