தஞ்சையில் சாலையோரங்களில் மருத்துவக்கழிவுகள், குப்பைகள் எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதி


தஞ்சையில் சாலையோரங்களில் மருத்துவக்கழிவுகள், குப்பைகள் எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 21 Dec 2018 4:00 AM IST (Updated: 21 Dec 2018 1:08 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் சாலையோரங்களில் மருத்துவக்கழிவுகள், குப்பைகளை எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

தஞ்சாவூர்,

மனிதன் பயன்படுத்திய கழிவுகளான குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என 2 வகைப்படும். பழங்காலத்தில் குப்பை குழிகள் இருந்தன. அதில் வீட்டு குப்பைகளை கொட்டி மக்கச் செய்வார்கள். மக்கிய குப்பைகள் உரமாக விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும். இன்றைக்கு குப்பை குழிகள் எந்த வீடுகளிலும் இல்லை. குப்பை மேடுகள் தான் நம் பயன்பாட்டில் இருக்கின்றன. அதில் மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் பொருட்களே அதிகம். இவை காற்றில் பறந்து எங்கும் பரவி சுற்றுப்புறத்தை மாசுபடுத்துகிறது. கால்வாய்களில் விழுந்து கழிவுநீர் செல்லவிடாமல் தடுத்து கொசுக்கள் உற்பத்தியை அதிகரிக்கிறது.

குப்பைகள் இன்றைக்கு பெரிய பிரச்சினையாக உள்ளது. குப்பைகளை எங்கு கொட்டுவது என்று தெரியாமல் தெருவோரங்களில், ஆறுகள், ஏரிகள், குளம், குட்டைகள் என அனைத்து நீர்நிலைகளிலும் கொட்டப்படுகின்றன. இதனால் நம் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதோடு மற்ற உயிர்களுக்கும் இன்னல்களை விளைவிக்கிறது. தஞ்சை-நாகை சாலையில் ஞானம்நகர் அருகே உள்ள சமுத்திரம் ஏரிக்கரையில் கோழி, ஆட்டு கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது.

மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள கழிவுகளையும் மோட்டார் சைக்கிள்கள், கார்களில் கொண்டு வந்து கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்லும்போது துர்நாற்றம் வீசுகிறது. தஞ்சை ஞானம்நகர், ராஜீவ்நகர், நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள பிலோமினாநகர் முதல் தெரு மற்றும் பால்பண்ணை அருகில், மருத்துவ கல்லூரி சாலை, கீழவாசல் என பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் குப்பைகள், மருத்துவக்கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றன. இப்படி கொட்டப்படும் குப்பைகள் மாநகராட்சி ஊழியர்களால் அள்ளப்படுவதில்லை. அப்படியே தீ வைத்து கொளுத்தப்படுகிறது. இதனால் தீ மள, மளவென எரிவதுடன் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு பிறகு வெளியேற்றப்படும் கழிவு பொருட்களான மருத்துவ கழிவுகள் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். பயன்படுத்தப்பட்ட ஊசிகள், மருந்து பாட்டில்கள், பஞ்சுகள், கையுறைகள் போன்ற மருத்துவ கழிவுகள் பெரும்பாலான இடங்களில் முறையாக அகற்றப்படாமல் அப்படியே குப்பைகளிலும், சாலையோரங்களிலும் கொட்டப்படுகின்றன. குப்பையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் நோய் பரப்பும் கிருமிகளாக உருவெடுக்கின்றன. தஞ்சை ஞானம்நகர் பகுதியில் சாலையோரம் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இந்த புகையை சுவாசிக்கும் மக்களுக்கு பல்வேறு நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. மருத்துவ கழிவுகள் கொட்டப்படும் இடத்தின் அருகில் தான் பள்ளிக்கூடமும் உள்ளது.

வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளையும் சிலர், சாலையோரம் கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதன்காரணமாக வாகனங்களில் செல்பவர்களுக்கும், நடந்து செல்பவர்களுக்கும் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்றவை ஏற்படுகிறது.எனவே இவற்றை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வதுடன், மருத்துவ கழிவுகளை தரம் வாரியாக பிரித்து, பாதுகாப்பான இடங்களில் புதைத்தும், எரித்தும் அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாகும்.

Next Story