பயிரை காப்பாற்ற டிராக்டரில் தண்ணீர் கொண்டு சென்ற விவசாயி பரிதாப சாவு


பயிரை காப்பாற்ற டிராக்டரில் தண்ணீர் கொண்டு சென்ற விவசாயி பரிதாப சாவு
x
தினத்தந்தி 21 Dec 2018 5:00 AM IST (Updated: 21 Dec 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

வாடிவரும் பயிரை காப்பாற்ற டிராக்டரில் தண்ணீர் கொண்டு சென்ற விவசாயி அதே டிராக்டரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

நரிக்குடி,

மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் மிதமாக மழை பெய்த நிலையில் வடகிழக்கு பருவமழையை நம்பி கடலை, சூரியகாந்தி போன்றவற்றை விவசாயிகள் பயிரிட்டனர். ஆனால் பருவமழை பெய்யாமல் ஏமாற்றி விட்டதால் பயிர்கள் கருகி வருகின்றன. அவற்றை காப்பாற்ற விலை கொடுத்து தண்ணீர் வாங்கி ஊற்றி வருகின்றனர். இவ்வாறு பயிரை காப்பாற்ற தண்ணீர் கொண்டு சென்ற விவசாயி டிராக்டரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

நரிக்குடி அருகே நடந்துள்ள இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
நரிக்குடி அருகே தேளிக்கிராமத்தை சேர்ந்த குருசாமி என்பவரது மகன் வீராச்சாமி (வயது37). இவர் தனது நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிரை காப்பாற்ற டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல தீர்மானித்தார்.

அதே ஊரைச்சேர்ந்த கண்ணாயிரம் என்பவர் மூலம் தேளி கண்மாயில் டிராக்டரில் தண்ணீர் பிடித்துவிட்டு வயலுக்கு கொண்டு சென்றார். அப்போது வீராச்சாமி டிராக்டர் எஞ்சினுக்கும், தண்ணீர் நிரப்பப்பட்ட டேங்குக்கும் இடைப்பகுதியில் நின்று சென்றுள்ளார். அப்போது கண்மாய் கரையில் ஏற முடியாமல் டிராக்டர் திணறியுள்ளது.

திடீரென்று முன்பகுதி தூக்கியதால் இடைப்பகுதியில் நின்றிருந்த வீராச்சாமியை நசுக்கியது. இதில் அவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்க மடைந்தார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மானாமதுரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நரிக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story