புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம்


புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம்
x
தினத்தந்தி 21 Dec 2018 3:30 AM IST (Updated: 21 Dec 2018 1:46 AM IST)
t-max-icont-min-icon

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என நெல்லையில் நடந்த ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நெல்லை, 

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என நெல்லையில் நடந்த ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

5-ம் ஆண்டு தொடக்க விழா

மத்திய, மாநில உள்ளாட்சி மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பின் 5-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் ஆலோசனை கூட்டம் நெல்லையில் நேற்று நடந்தது. கூட்டமைப்பு தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார்.

அமைப்பாளர் சண்முகசுந்தரராஜ் வரவேற்று பேசினார். நடேசன், கதிர்வேல் ஆறுமுகம், சிதம்பரம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். வாழ்நாள் சாதனையாளர் விருது கண்ணன் என்பவருக்கு வழங்கப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

குறைந்தபட்ச ஓய்வூதியம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதை போல், தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம், மருத்துவப்படி ரூ.1000 வழங்க வேண்டும். அனைத்து நோய்களுக்கும் அனைத்து மருத்துவமனைகளில் உச்ச வரம்பு இல்லாமல் சிகிச்சை பெற ஏற்பாடு செய்ய வேண்டும்.

பணியில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு ஈமக்கிரியை செலவுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதேபோல் ஓய்வூதியர்களுக்கும் ஈமக்கிரி தொகையை வழங்க வேண்டும். அனைத்து ஓய்வூதியர்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும்.

புதிய பென்சன் திட்டம்

தமிழக அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு ஓய்வு பெறும் நாளில் பணப்பலன்களை வழங்க வேண்டும். வங்கி ஓய்வூதியர்களுக்கு ஊதிய மாற்றம் ஏற்படும் போது, ஓய்வூதியத்தையும் மாற்ற வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க மாநில துணை தலைவர் நல்லபெருமாள், மாவட்ட துணை தலைவர் சீத்தாராமன், ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் கிருஷ்ணன், சொக்கலிங்கம், தாமஸ் பிராங்கோ ராஜேந்திர தேவ், திருவேங்கடேஷ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story