மரித்து போன மனிதநேயம்: சாலையோரம் இறந்து கிடந்த முதியவரின் உடல் 4 மணி நேரத்துக்கு பின் அடக்கம்
வேடசந்தூரில் சாலையோரத்தில் அனாதையாக இறந்து கிடந்த முதியவரின் உடல் 4 மணி நேரத்திற்கு பிறகு அடக்கம் செய்யப்பட்டது. இதனால் மனிநேயம் மரித்து விட்டதோ? என்று எண்ண தோன்றியது.
வேடசந்தூர்,
வேடசந்தூரில், பழனி சாலையோரம் டாஸ்மாக் மதுக்கடை முன்பு உள்ள ஒரு புளியமரத்தின் அடியில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் படுத்த படுக்கையாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. அவருக்கு உறவினர்கள் என்று சொல்லி யாரும் கிடையாது.
பரிதாபமான நிலையில் உள்ள அவர் மீது இரக்கப்பட்டு அந்த வழியாக சாலையில் செல்வோர், உணவு வாங்கி கொடுப்பார்கள். அந்த உணவை சாப்பிட்டு அவர் உயிர் வாழ்ந்து வந்தார். யாரும் உணவு வாங்கி கொடுக்கவில்லையெனில் அவர் பட்டினியாக தான் இருப்பார். இந்தநிலையில் நேற்று மாலை 3 மணிக்கு வழக்கமாக புளியமரத்தின் கீழ் படுத்துக்கிடந்தவர் எந்தவித அசைவும் இல்லாமல் கிடந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அருகில் சென்று பார்த்தனர். அப்போது அவர் இறந்து கிடப்பது தெரியவந்தது.
இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்துக்கும், பேரூராட்சி நிர்வாகத்துக்கும் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸ் துறையினரும், வருவாய்த்துறையினரும் வந்து பார்வையிட்டு முதியவர் இறந்துவிட்டார் என்பதை உறுதிசெய்துவிட்டு சென்றனர்.
அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியாததால் பேரூராட்சி நிர்வாகத்தினர் அடக்கம் செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து சுமார் 4 மணி நேர தாமதத்துக்கு பின்னர், இரவு 7 மணிக்கு பேரூராட்சி பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதையடுத்து அவரது உடல் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் குங்குமக்காளியம்மன் கோவில் தெருவில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
உறவினர்கள் இறந்தால் ஓடி வரும். சொந்தங்கள் இல்லாததால் அனாதையாக இறப்பவர்களின் கதி அதோ கதியாகி விடுகிறது. 4 மணி நேரத்திற்கு பிறகு சாலையோரத்தில் இறந்து கிடந்த முதியவர் உடல் அடக்கம் செய்யப்பட்டு இருப்பது மனிதநேயம் மரித்து விட்டது என்ற நிலையை உருவாக்கி உள்ளது.
Related Tags :
Next Story