மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு வாழ்நாள் சிறை கரூர் மகிளா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு வாழ்நாள் சிறை கரூர் மகிளா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
x
தினத்தந்தி 21 Dec 2018 3:45 AM IST (Updated: 21 Dec 2018 2:39 AM IST)
t-max-icont-min-icon

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து கரூர் மகிளா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

கரூர்,

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதி, தங்களது மகளுடன் கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் தங்கியிருந்து ஜவுளி தொழில் செய்து வந்தனர். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால், தனது மகளுடன் அப்பெண் வேறு இடத்துக்கு சென்று விட்டார். இந்நிலையில் மகளின் உடலில் மாற்றம் ஏற்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது 3-ம் வகுப்பு படித்து கொண்டிருந்த நேரத்தில் கரூர் மாவட்டத்தில் தங்கியிருந்த போது தந்தையே தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியில் உறைந்த போன தாய், இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு கரூர் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இதன் விசாரணை முடிவு பெற்று நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவரது தந்தைக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 2 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று மகிளா கோர்ட்டு நீதிபதி சசிகலா தீர்ப்பளித்தார். இதையடுத்து கரூர் அனைத்து மகளிர் போலீசார், சிறுமியின் தந்தையை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 

Next Story