மணமேடு பகுதியில் மணல் குவாரி அமைக்க வேண்டும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கோரிக்கை


மணமேடு பகுதியில் மணல் குவாரி அமைக்க வேண்டும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 21 Dec 2018 3:29 AM IST (Updated: 21 Dec 2018 3:29 AM IST)
t-max-icont-min-icon

பாகூரை அடுத்த மணமேடு பகுதியில் உடனடியாக மணல் குவாரி அமைக்க வேண்டும் என்று மாட்டு வண்டி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பாகூர்,

தென் பெண்ணை ஆற்றில் இருந்து மணல் அள்ளி கடத்துவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து பாகூர் தாசில்தார் மற்றும் போலீசார் தென்பெண்ணை ஆற்று கரையோரத்தில் உள்ள கிராமங்களில் சென்று மணல் கடத்துவது குற்றமாகும். மணல், திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்படுவார்கள் என ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்தநிலையில் பாகூர் போலீஸ் நிலையத்தில் மணல் திருட்டை தடுப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தெற்குபகுதி போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகீம் தலைமை தாங்கினார். தாசில்தார் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகேணஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் தன்வந்திரி, வீரன், இளவரசன் மற்றும் மாட்டுவண்டி தொழிலாளர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் கூறும்போது, ‘ஆற்றங்கரையோர கிராமங்களை சேர்ந்த பலர் மாட்டு வண்டிகள் மூலம் மணல் எடுக்கும் தொழில் செய்து வந்தனர். ஆனால் தற்போது மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளோம்.

இதற்கிடையே மணல் குவாரி அமைக்க மணமேடு பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இதுவரை மணல் குவாரி அமைக்கப்படவில்லை. எனவே மாட்டுவண்டி தொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் அங்கு உடனடியாக மணல் குவாரி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மேலும் சிலர் பேசுகையில், சோரியாங்குப்பம் பகுதியில் சுமார் 13 மதுக்கடைகள் உள்ளன. இங்கு மது குடிக்க வருபவர்களால் பாதுகாப்பு இல்லாதநிலை இருந்து வருகிறது. மதுக்கடைகளை அகற்ற கோரிக்கை விடுத்தது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மதுக்கடையை அகற்றாத கவர்னர் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுப்பது ஏன்? என புகார் கூறினார்கள்.

Next Story