சாக்லெட் சாப்பிட்ட பிளஸ்-1 மாணவன் மர்ம சாவு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


சாக்லெட் சாப்பிட்ட பிளஸ்-1 மாணவன் மர்ம சாவு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 21 Dec 2018 3:46 AM IST (Updated: 21 Dec 2018 3:46 AM IST)
t-max-icont-min-icon

சாக்லெட் சாப்பிட்ட பிளஸ்-1 மாணவன் மர்மமான முறையில் இறந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி,

புதுச்சேரி சாரம் வேலன் நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு மஞ்சு (வயது 18) என்ற மகளும் மணிபாரதி (16) என்ற மகனும் இருந்தனர். ஆறுமுகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே ஜெயலட்சுமி கூலி வேலை செய்து தனது பிள்ளைகளை படிக்க வைத்தார். மணிபாரதி லாஸ்பேட்டை நாவலர் நெடுஞ் செழியன் அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தான்.

கடந்த 17-ந் தேதி பள்ளியில் நடைபெற்ற அரையாண்டு தேர்வை எழுதிவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு அறிமுகமில்லாத நபர் ஒருவர் ஒரு சாக்லெட்டை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதனை வாங்கி சாப்பிட்ட போது கெமிக்கல் வாசனை வந்தது. இதனை தொடர்ந்து அவன் சாக்லெட்டை தூக்கி எறிந்துவிட்டு வீட்டிற்கு சென்றான்.

வீட்டிற்கு சென்ற உடன் வயிற்றில் எரிச்சல் ஏற்பட்டு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடனே அவனது பாட்டி மணிபாரதியை கதிர்காமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாத்திரை கொடுத்து வீட்டிற்கு அனுப்பிவிட்டனர். ஆனால் வீட்டிற்கு வந்த பிறகும் வாந்தி நிற்கவே இல்லை.

இதனை தொடர்ந்து மறுநாள் அவனது சகோதரி மஞ்சு மீண்டும் அவரை அதே ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றார். அப்போது அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் இனி வாந்தி நின்றுவிடும் வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள் என கூறி அனுப்பி விட்டனர். மேலும் சில முறை வாந்தி வந்தாலும் கவலைப்பட வேண்டாம் குணமாகிவிடுவான் என்று கூறினர்.

இதனை தொடர்ந்து மஞ்சு தனது தம்பியை வீட்டிற்கு அழைத்து வந்தார். ஆனால் வாந்தி நிற்கவே இல்லை. மணிபாரதியின் உடல்நிலை மீண்டும் பாதிப்பிற்கு உள்ளானது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் நேற்று முன்தினம் பிற்பகல் மீண்டும் அவனை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான்.

இது குறித்து கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையே மணிபாரதி இறந்த செய்தி கேட்டு அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தநிலையில் டாக்டர்கள் சரியாக சிகிச்சை அளிக்காததால் தான் மணிபாரதி இறந்து விட்டார். டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜிப்மரில் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும், குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் திடீரென வழுதாவூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதில் என்.எஸ்.ஜே. ஜெயபால் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்து மருத்துவக்கல்லூரி இயக்குனர் டாக்டர் கோவிந்தராஜன் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஜிப்மரில் மாணவனின் உடல் பிரேத பரிசோதனையை நடத்துவதாகவும், மாணவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக விசாரித்து தவறு கண்டுபிடிக்கப்பட்டால் டாக்டர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார். இதை ஏற்று மறியலை அவர்கள் கைவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story