கடலூர் உழவர் சந்தையில் ரசாயனம் தெளித்த வாழைத்தார்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை
கடலூர் உழவர் சந்தையில் ரசாயனம் தெளித்த வாழைத்தார்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடலூர்,
கடலூர் இம்பீரியல் சாலையில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு ஞானமேடு, கண்டக்காடு, கீரப்பாளையம் உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் வயல்களில் விளையும் காய்கறிகள், பழங்கள், கீரைகளை கொண்டு வந்து இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்து வருகின்றனர்.
இது தவிர உழவர் சந்தை வெளியேயும் சிலர் வாழைத்தார்கள், காய்கறிகளை வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் உழவர் சந்தைக்குள் ரசாயனம் தெளித்த வாழைத்தார்களை வைத்து விற்பனை செய்வதாக கடலூர் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி நேற்று கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி தட்சிணாமூர்த்தி தலைமையிலான உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீரென உழவர் சந்தைக்குள் சென்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு பெண் வைத்திருந்த கடையில் ரசாயனம் தெளித்து வாழைத்தார்களை பழுக்க வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த கடையில் இருந்த அனைத்து வாழைத்தார்களையும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதே போல் உழவர் சந்தைக்கு வெளியில் ரசாயனம் தெளித்து வைக்கப் பட்ட வாழைத்தார்களையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வாழைத்தார்களை நகராட்சி ஊழியர்கள் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்று அழித்தனர்.
இதைத்தொடர்ந்து ரசாயனம் தெளித்து வாழைத்தார்களை உழவர் சந்தைக்குள் வைத்து விற்பனை செய்த பெண்ணின் உழவர் அடையாள அட்டையை உழவர் சந்தை வேளாண்மை அதிகாரிகள் ரத்து செய்தனர். தொடர்ந்து அந்த பெண் உழவர் சந்தைக்குள் கடை வைக்க தடையும் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story