வேலை நிறுத்தம் 12-வது நாளாக நீடிப்பு கிராம நிர்வாக அலுவலர்கள் சாலை மறியல் - 213 பேர் கைது
கிராம நிர்வாக அலுவலர்களின் வேலை நிறுத்தம் 12-வது நாளாக நீடித்தது. நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட 213 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்,
இணையதள அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பொறுப்பு ஊதியம் வழங்க வேண்டும், மாவட்ட மாறுதல் உத்தரவுகளை வழங்க வேண்டும் என்பன உள்பட 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் கடந்த 10-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
இவர்களின் போராட்டம் நேற்றும் நீடித்தது. போராட்டத்தின் 12-வது நாளான நேற்று அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகத்தை கிராம நிர்வாக அலுவலர்கள் முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.
விழுப்புரத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தை கிராம நிர்வாக அலுவலர்கள் முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பெரியாப்பிள்ளை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் புஷ்பகாந்தன் அனைவரையும் வரவேற்றார். இணை செயலாளர் பொன்.கண்ணதாசன், துணைத்தலைவர் பெரியதமிழன், அமைப்பு செயலாளர் இந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாநில செயலாளர் சுப்பிரமணியன் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் 13 வட்ட பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதனை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விழுப்புரம்-திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
உடனே விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 31 பெண்கள் உள்பட 213 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் இவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story