பாரம்பரிய இசையை மீட்டெடுக்க தொழில்நுட்ப பாடல்களை கேட்பதை மாணவ-மாணவிகள் நிறுத்த வேண்டும் சேலத்தில் இளையராஜா பேச்சு
பாரம்பரிய இசையை மீட்டெடுக்க வேண்டும் என்றால் தொழில்நுட்பத்தில் உருவாகும் பாடல்களை கேட்பதை மாணவ-மாணவிகள் நிறுத்த வேண்டும் என்று சேலத்தில் இளையராஜா பேசினார்.
சேலம்,
சேலம் ஏ.வி.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இசையமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. ஏ.வி.எஸ். மற்றும் சக்தி கைலாஷ் கல்வி நிறுவனங்களின் செயலாளர் ராஜவிநாயகம் தலைமை தாங்கினார். தலைவர் கைலாசம், தாளாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் கார்மல் மெர்சி பிரியா வரவேற்றார்.
விழாவில் இளையராஜா கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மத்தியில் கேக் வெட்டினார். பின்னர் கல்லூரி மாணவர்கள் எழுதிய கவிதைக்கு இசையமைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
என்னுடைய இளம் வயது வாழ்க்கைப்பற்றி உங்களுக்கு தெரியாது. சிறு வயதில் ‘மியூசிக்‘ வரும் என்ற அறிகுறி எதுவும் என்னிடம் கிடையாது. நான் நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணமே இருந்தது.
என்னிடம் எதுக்கு படிக்கிறாய்? என்று கேட்டால் கூட எனக்கு சொல்ல தெரியாது. ஒரு ஜோதிடர் உனக்கு 8-ம் வகுப்புக்கு மேல் படிப்பு கிடையாது என்று கூறி விட்டார். இதை பொய்யாக்க வேண்டும் என்று நினைத்தேன். 9-ம் வகுப்பு சேரும் போது, பள்ளியில் கல்வி கட்டணம் கட்டுவதற்கு அம்மா கையில் 25 ரூபாய் இல்லை. இதையடுத்து உறவினர் ஒருவரின் உதவியுடன் வைகை அணையில் வேலை செய்தேன். அங்கு குழாய் மூலம் தண்ணீர் பிடிக்கும் போது சத்தமாக பாடுவேன்.
வாரந்தோறும் சம்பளமாக 7 ரூபாய் கிடைக்கும். இந்த பணத்தை பெறும் போது வானில் சிறகடித்து பறப்பது போல் தெரியும். இது என்னுடைய ரூ.7 கோடி சம்பாத்தியம் கொடுக்கவில்லை. காலம் முழுவதும் கேட்கப்படும் பாடல் எதுவோ அதுவே பாடல் என்ற தகுதி பெறும். பாடல் என்பது எப்போது கேட்டாலும் புத்தம்புது பூப்போல் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைதொடர்ந்து மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு இளையராஜா பதில் அளித்து பேசியதாவது:-
வட இந்திய கலைஞர்களில் ரோசன், மதன்மோகன், ஸ்ரீ ராமச்சந்திரா என 30-க்கும் மேற்பட்ட இசை கலைஞர்களை பிடிக்கும். நான் இசையமைத்ததில் கரகாட்டக்காரன் படத்தில் மாங்குயிலே, பூங்குயிலே என்ற பாடல் மிக குறைந்த நேரத்தில் இசையமைத்த பாடலாகும்.
அந்த கால பாடலுக்கும், இந்த கால பாடலுக்கும் வேறுபாடு ஒன்றுமில்லை. எல்லா பாடல்களுமே சரிகமபதநி என்ற மெட்டுகளில் தான் இருக்கும். பறை, வில்லுப்பாட்டு உள்ளிட்ட பாரம்பரிய இசையை மீட்டெடுக்க வேண்டும் என்றால் மாணவ, மாணவிகள் தொழில்நுட்பம் என்ற பெயரில் உருவாகின்ற பாடல்களை கேட்பதை நிறுத்தி கொள்ள வேண்டும். தற்போது தொழில்நுட்பத்தில் அதிகம் சத்தம் இருப்பதால் அறிவை செயலிழக்க செய்யும். மேலும் பாரம்பரிய இசை கலைஞர்கள் அடுத்த தலைமுறையினருக்கு அந்த இசையை கற்றுக் கொடுக்க வேண்டும். நான் முதல் படத்துக்கு வாங்கிய சம்பளம் ரூ.5 ஆயிரம் ஆகும். நான் சந்திக்காமல் பிடித்த நபர் என்றால் அது பாரதியார். உங்கள் மனது யாரை கண்டு அமைதியாக இருக்கிறதோ, அவர் தான் உங்களுடைய குரு ஆவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story