சிறு, குறுந்தொழில் வளர்ச்சிக்காக மதுரை-தூத்துக்குடி இடையே தொழில் வழித்தடம் அமைச்சர் பெஞ்சமின் தகவல்
சிறு, குறுந்தொழில் வளர்ச்சிக்காக மதுரை-தூத்துக்குடி இடையே தொழில் வழித்தடம் அமைய உள்ளதாக, ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்தார்.
தூத்துக்குடி,
சிறு, குறுந்தொழில் வளர்ச்சிக்காக மதுரை-தூத்துக்குடி இடையே தொழில் வழித்தடம் அமைய உள்ளதாக, ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்தார்.
தொழில் கண்காட்சி
தூத்துக்குடி மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் சங்கம்(துடிசியா) சார்பில் 3 நாள் தொழில் கண்காட்சி தூத்துக்குடி ஏ.வி.எம்.கமலவேல் திருமண மண்டபத்தில் நேற்று தொடங்கியது. கண்காட்சிக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கினார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, தமிழ்நாடு சிறு, குறு தொழில் சங்க தலைவர் அன்புராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துடிசியா தலைவர் நேருபிரகாஷ் வரவேற்று பேசினார். கண்காட்சி தலைவர் லினோ விளக்கி பேசினார். சிறப்பு அழைப்பாளராக ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
முதன்மை மாநிலம்
அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு தொழில் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இந்தியாவில் முதன்மையான மாநிலமாக திகழ்ந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிட்கோ நிறுவனத்தில் இயங்கி வரும் சிறு, குறு தொழிற்சாலைகள் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகின்றன. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் சிறு, குறு தொழில் முன்னேற்றத்துக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அதன்படி கடந்த 7 ஆண்டுகளில் நீட்ஸ் திட்டத்தின் கீழ் 32 பேருக்கு ரூ.2 கோடியே 43 லட்சம் மானியமும், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தில் 979 பேருக்கு ரூ.4 கோடியே 3 லட்சம் மானியம் உள்பட மொத்தம் ரூ.11 கோடியே 96 லட்சம் மானியம் வழங்கப்பட்டு உள்ளது.
தொழில் வழித்தடம்
மதுரை-தூத்துக்குடி வரையிலான தொழில் வழித்தடம் அமைய உள்ளது. இதன் மூலம் சிறு, குறு தொழில் வளர்ச்சி பெறும். 2015-ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.16 ஆயிரத்து 576 கோடி சிறு, குறு தொழில்கள் முதலீட்டுக்கான 10 ஆயிரத்து 73 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இதில் ரூ.7 ஆயிரத்து 273 கோடி முதலீட்டுக்கான 5 ஆயிரத்து 813 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டு தொழில்கள் தொடங்கப்பட்டு உள்ளன. 58 சதவீதம் ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. 44 சதவீதம் முதலீடு பெறப்பட்டு உள்ளது.
முதலீடு இலக்கு
தூத்துக்குடி மாவட்டத்தில் 266 ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு 212 ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இது 80 சதவீதம் ஆகும். முதலீட்டை பொறுத்தவரை ரூ.260 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு ரூ.144 கோடி 53 லட்சம் முதலீட்டில் தொழில் தொடங்கப்பட்டு உள்ளது. இது 56 சதவீதம் ஆகும். வருகிற ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர் மாநாடு நடக்கிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 108 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ரூ.380 கோடி முதலீடு செய்ய முன்வந்து உள்ளன. தூத்துக்குடியில் 1000 கோடி முதலீடு செய்ய வேண்டும். சிறு, குறு தொழில் தொடங்குவதற்கு ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதனை தாண்டி ரூ.30 ஆயிரம் கோடியை எட்டி விடும்.
இவ்வாறு அமைச்சர் பெஞ்சமின் கூறினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story