நெல்லையில், இன்று மண்டல அளவிலான பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி மாவட்ட வணிகர் சங்கத்தினர் கலந்து கொள்ள அழைப்பு

நெல்லையில், இன்று மண்டல அளவிலான பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி மாவட்ட வணிகர் சங்கத்தினர் கலந்து கொள்ள அழைப்பு
x
தினத்தந்தி 21 Dec 2018 9:30 PM GMT (Updated: 21 Dec 2018 6:54 PM GMT)

நெல்லையில் நடக்க உள்ள மண்டல அளவிலான பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட உணவு விடுதி, வணிகர் சங்கம், திருமண மண்டபம் உரிமையாளர்கள் கலந்துகொள்ள வேண்டும் என கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி, 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-

ஆலோசனை கூட்டம்

தமிழகத்தில், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு 1.1.2019 முதல் தடை விதிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அந்த ஆணையின் படி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அதற்கு மாற்றாக பயன்படுத்த கூடிய பொருட்கள் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து பங்களிப்பாளர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை மண்டல அளவிலான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை கூட்டம் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு, நெல்லை மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நடக்கிறது.

இந்த கூட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தலைமை தாங்குகிறார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். இதில் நெல்லை மண்டலத்தில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த தமிழக அமைச்சர்கள் பங்கேற்க உள்ளார்கள்.

வணிகர்கள்

இந்த கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த உள்ளாட்சி அமைப்புகள், அரசு அதிகாரிகள், கல்வித்துறை, தன்னார்வு தொண்டு நிறுவனங்கள், திருமண மண்டபம், உணவு விடுதி உரிமையாளர்கள், வணிகர்கள் தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக வளாக உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து பங்களிப்பாளர்களும் கலந்து கொண்டு பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்க உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story