பள்ளி வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு திருமணத்துக்கு சென்ற 8 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு
பள்ளி வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு பள்ளிக்கு வராமல் திருமணத்துக்கு சென்ற தலைமை ஆசிரியர் உள்பட 8 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி,
இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட மாசிநாயக்கனப்பள்ளியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மாசிநாயக்கனப்பள்ளி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி நேற்று முன்தினம் ஓசூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் ஆய்வு செய்தார்.
அவர் மாசிநாயக்கனப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்றார். அந்த நேரம் பள்ளியில் தலைமை ஆசிரியர் குபேந்திரன் பணியில் இல்லை. அதே போல பள்ளியில் உள்ள வருகை பதிவேட்டில் மொத்தம் உள்ள 13 ஆசிரியர்களும் கையெழுத்து போட்டு இருந்ததும், அதில் 7 ஆசிரியர்கள் பணியில் இல்லாமல் இருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து மாலை 4 மணி வரை பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார். விசாரணையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் குபேந்திரன் மற்றும் 7 ஆசிரியர்கள் என மொத்தம் 8 பேரும் வருகை பதிவேட்டில் பள்ளிக்கு வந்ததை போல கையெழுத்து போட்டு விட்டு அனைவரும் பெங்களூருவில் ஒரு திருமண விழாவுக்கு சென்றதும், மாணவ, மாணவிகள் அனைவரும் ஆசிரியர்கள் இன்றி வகுப்பறையில் நாள் முழுவதும் இருந்ததும் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து பள்ளியின் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு பள்ளிக்கு வராமல் திருமணத்திற்கு சென்ற தலைமை ஆசிரியர் உள்பட 8 ஆசிரியர்கள் மீதும் 17 (பி) பிரிவின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உத்தரவிட்டார். விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமல் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டு சென்ற மாசிநாயக்கனப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்த 25 மாணவர்கள், 4 மாணவிகள் என மொத்தம் 29 பேரும் தோல்வி அடைந்திருந்தனர். இது கிருஷ்ணகிரி மாவட்ட கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்பட ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும், புதிதாக ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாணவ, மாணவிகளின் பெற்றோர் போராட்டங்கள் நடத்தினார்கள்.
இதைத் தொடர்ந்து அப்பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி அவ்வப்போது அப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் வருகை பதிவேட்டில் பள்ளிக்கு வந்ததை போல கையெழுத்து போட்டு விட்டு தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 8 ஆசிரியர்கள் விடுமுறை எடுத்து திருமணத்திற்கு சென்ற சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story