கூடலூரில் நடுரோட்டில் பஞ்சராகி நின்ற சுற்றுலா பஸ் போக்குவரத்து பாதிப்பு
கூடலூரில் நடுரோட்டில் சுற்றுலா பஸ் பஞ்சராகி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடலூர்,
ஊட்டியில் இருந்து கூடலூர் வழியாக பெங்களூருவுக்கு வடமாநில சுற்றுலா பஸ் ஒன்று பயணிகளுடன் நேற்று காலை 11 மணிக்கு சென்று கொண்டிருந்தது. கூடலூர் பழைய பஸ் நிலையம் அருகே வந்தபோது திடீரென பஸ்சின் முன்பக்க டயர் பஞ்சரானது. இதனால் நடுரோட்டில் பஸ் நின்றது. இதன் காரணமாக பின்னால் வந்த வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் வகையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடலூர் பழைய பஸ் நிலையம் முதல் ஊட்டி செல்லும் அகலம் குறைந்த சாலையின் நடுவில் புதியதாக தடுப்பு சுவர்கள் வைக்கப்பட்டதால், வாகனங்கள் எந்த பக்கமும் திரும்பி செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யர்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் சத்தியன் ஆகியோர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் பஞ்சராகி நின்ற பஸ்சை உடனடியாக அங்கிருந்து அகற்ற முயற்சி செய்தனர்.
அதன்படி உடனடியாக வேறு டயரை மாற்றி பஸ்சை அங்கிருந்து ஓட்டி செல்லுமாறு டிரைவரை வலியுறுத்தினர். தொடர்ந்து பஞ்சரான டயரை மாற்றும் பணி நடைபெற்றது. இதனிடையே கூடலூர்- ஊட்டி சாலையில் உள்ள நகராட்சி அலுவலகம் வரை வாகனங்கள் வரிசையாக நின்றன. இதற்கிடையே கூடலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும் போக்குவரத்து தானியங்கி சிக்னலை போலீசார் நிறுத்தினர்.
பின்னர் கூடலூர்-ஊட்டி சாலையில் அக்ரஹாரம் தெரு எதிரே உள்ள இடைவெளி வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டது. இந்த சமயத்தில் மைசூரு, கோழிக்கோடு செல்லும் சாலைகளிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. பின்னர் சுழற்சி முறையில் ஊட்டி சாலையில் வாகனங்களை போக்குவரத்து போலீசார் அனுமதித்தனர். இருப்பினும் கூடலூர் நகரின் அனைத்து முக்கிய சாலைகளிலும் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மதியம் 12 மணிக்கு பஸ்சின் டயர் மாற்றப்பட்டு, அங்கிருந்து ஓட்டி செல்லப்பட்டது.
இதனை தொடர்ந்து வாகன போக்குவரத்து படிப்படியாக தொடங்கியது. போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் தேவை இல்லாத இடங்களில் சாலையின் நடுவில் தடுப்பு சுவர்களை வைத்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு தினமும் ஏற்படுகிறது, எனவே அகலம் குறைவான சாலையில் வைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர்களை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
வாகனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு முக்கிய இடங்களில் சாலையின் நடுவில் தடுப்பு சுவர்களை போலீசார் வைத்துள்ளனர். ஆனால் கூடலூர் பழைய பஸ் நிலையம் முதல் ஊட்டி செல்லும் குறுலான சாலையின் நடுவில் தடுப்பு சுவர்களை வைத்துள்ளதால் விபத்து காலங்களில் வாகனங்கள் செல்ல முடிவது இல்லை. தடுப்பு சுவர்கள் பாதி இடத்தை அடைத்து கொள்கிறது. இதில் வாகனங்களை எப்படி ஓட்ட முடியும். மேலும் விபத்து நடந்த உடன் வாகனங்களை வேறு வழியாக ஓட்டி செல்ல முடியாதவாறு சாலையின் நடுவில் தடுப்பு சுவர்கள் வைக்கப்பட்டுள்ளது.
இனி வரும் காலங்களில் கோடை சீசன் தொடங்க உள்ளதால் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரிக்கும் சமயத்தில் தடுப்பு சுவர்களால் பல்வேறு இடையூறுகள் பொதுமக்களுக்கு ஏற்படும். இதனை அதிகாரிகள் கருத்தில் கொண்டு தேவை இல்லாத இடங்களில் வைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர்களை அகற்ற வேண்டும். இல்லை எனில் கூடலூரில் போக்குவரத்து பாதிப்பு இன்னும் அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் அதிருப்தியுடன் கூறினர்.
Related Tags :
Next Story