உயர் அழுத்த மின்கோபுரங்களுக்காக விவசாயிகளை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் பணிகள் நடக்கின்றன ஈரோட்டில் முத்தரசன் பேட்டி


உயர் அழுத்த மின்கோபுரங்களுக்காக விவசாயிகளை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் பணிகள் நடக்கின்றன ஈரோட்டில் முத்தரசன் பேட்டி
x
தினத்தந்தி 21 Dec 2018 9:45 PM GMT (Updated: 21 Dec 2018 7:44 PM GMT)

உயர் அழுத்த மின்கோபுரங்களுக்காக தங்கள் நிலங்களில் இருந்து விவசாயிகளை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் பணிகள் நடக்கின்றன என்று ஈரோட்டில் பேட்டி அளித்த முத்தரசன் கூறினார்.

ஈரோடு, 

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன் நேற்று ஈரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள 3-ல் ஒரு பங்கு மாவட்டங்களில், அதாவது 13 மாவட்டங்களில் விவசாய விளைநிலங்கள் வழியாக உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த திட்டத்தால், விவசாயிகள், குறிப்பாக சிறு-குறு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். விவசாயிகளை அவர்களின் நிலங்களில் இருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவது போன்று அந்த பணிகள் நடந்து வருகின்றன.

உயர் அழுத்த மின்கோபுரங்கள் தொடர்பாக கடந்த மே மாதம் 6-ந் தேதி ஈரோட்டில் நடந்த மாநாட்டில் அனைத்துக்கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு, இதுபற்றிய தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். அந்த தீர்மானங்கள் முறையாக அரசின் ஆட்சியாளர்களிடம் அளிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், தற்போது காவல்துறையையும், வருவாய்த்துறையையும் கொண்டு சர்வாதிகார நாடுகளில் என்ன நடக்குமோ அதைப்போன்ற காரியங்கள் நடந்து வருகின்றன. விவசாயிகளின் முறையீடுகள் பயன் அளிக்காத காரணத்தால் காத்திருப்பு போராட்டங்களை அறிவித்து விவசாயிகள் நடத்தி வருகிறார்கள். அரசின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களின் போராட்டத்துக்கு அரசியல் கட்சியினர் ஆதரவு அளித்து வருகிறார்கள். ஆனால் தமிழக அமைச்சர்கள் சிலர் போராட்டங்களை எதிர்க்கட்சிகள் தூண்டி விடுவதாக கூறி, போராட்டம் நடத்துபவர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுவதையும், போராட்டத்தை சுமுகமாக பேசித்தீர்க்க வேண்டிய நிலையில் இருந்து நழுவுவதையும் கைவிட வேண்டும்.

அண்டை மாநிலமான கேரளா மற்றும் வெளிநாடுகளில் உயர் அழுத்த மின்சாரம் கேபிள்கள் மூலம் தரைவழியாக கொண்டு செல்லப்படுகிறது. அப்படி இருக்கும்போது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் வலுக்கட்டாயமாக கோபுரங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.


தமிழ்நாட்டில் சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மின்சார உற்பத்தியில் தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டு உள்ளன. தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக விவசாயிகளை வஞ்சிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் மத்திய -மாநில அரசுகளை இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டிக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அதானிக்கு சொந்தமான நிறுவனம் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்கிறது. இதற்காக அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பெருமளவுக்கு அடிமாட்டு விலையில் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. தற்போது அங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக விவசாயிகளின் நிலங்களில் நிலத்தை விட்டு விரட்டி அடிக்கும் வகையில் மின்கோபுரங்கள் அமைத்து வருகிறார்கள். இந்த முயற்சியை கைவிட்டு கேபிள் மூலம் மின்சாரம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் போராட்டம் தொடரும் நிலை நீடிக்கும்.

பவானி ஆற்றில் மனித கழிவுகள் அப்படியே கலக்கும் மோசமான கொடூரமான சம்பவம் நடந்து வருகிறது. இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து உள்ளன. வருகிற 29 மற்றும் 30-ந் தேதிகளில் ‘பவானியை காப்போம்’ என்ற பெயரில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் விழிப்புணர்வு இயக்கம் நடத்துகிறது.

தமிழகத்தில் பல்வேறு பிரச்சினைகள் நிலவும் இந்த நேரத்தில் வருகிற 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை 3 நாட்கள் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு கூட்டம் பெருந்துறையில் நடக்கிறது. அகில இந்திய தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இந்த கூட்டத்தில் தேசிய, மாநில அளவிலான பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு தீர்மானங்களாக நிறைவேற்றப்படும்.

இவ்வாறு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

Next Story