ஈரோடு மாவட்டத்தில் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டம் ரூ.1000 கோடி பணபரிவர்த்தனை பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தால் ரூ.1000 கோடி வர்த்தகம் பாதிப்பு அடைந்தது.
ஈரோடு,
வங்கி அதிகாரிகளுக்கு 11-வது ஊதியக்குழு பரிந்துரையின் படி சம்பள உயர்வு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்து இருந்தது. அதன்படி நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.
ஈரோடு மாவட்டத்தில் ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, லட்சுமிவிலாஸ் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, விஜயாவங்கி உள்ளிட்ட வங்கிகளின் அதிகாரிகள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு ஸ்டேட் வங்கி முன்பு கூடிய வங்கி அதிகாரிகள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு மாவட்ட ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் சங்க உதவி பொதுச்செயலாளர் செல்வம், கனரா வங்கி அதிகாரிகள் சங்க மாவட்ட தலைவர் வேலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.
வங்கி அதிகாரிகள் போராட்டம் காரணமாக வங்கிகளில் முக்கிய பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. கிராமப்புற வங்கிகளில் பணிகள் ஏதும் நடைபெறவில்லை. நகர்ப்புற வங்கிகளில் வாடிக்கையாளர்கள் வந்து, பணிகள் ஏதும் நடைபெறாததால் ஏமாற்றத்துடன் சென்றனர்.
இதுகுறித்து கனரா வங்கி அதிகாரிகள் சங்க மாவட்ட உதவி பொதுச்செயலாளர் செல்வம் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை வங்கிகள் அனைத்தும் திறந்து இருந்தாலும் எந்த வங்கியிலும் பணிகள் நடைபெறவில்லை. குறிப்பாக பண பரிவர்த்தனை முழுமையாக நிறுத்தப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் சுமார் ரூ.1000 கோடி பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டு உள்ளது. வங்கியில் நகை அடகு வைப்பது, காசோலை மூலம் பணம் செலுத்துவது, டெபாசிட் செய்வது, டெபாசிட் பணத்தை திரும்ப பெறுவது என்று எந்த வகை பணியும் நடைபெறவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story