நீதிமன்ற அலுவலக பணிகளை பெற முறைகேட்டில் ஈடுபட்டால் கிரிமினல் வழக்கு மாவட்ட முதன்மை நீதிபதி எச்சரிக்கை
நீதிமன்ற அலுவலக பணிகளை பெற முறை கேட்டில் ஈடுபட்டால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று கோவை மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் எச்சரித்தார். இது குறித்து அவர் கோவையில் நிருபர் களுக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:-
கோவை,
கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் 33 அலுவலக உதவியாளர்கள் மற்றும் 16 இரவுக்காவலர்கள், தோட்டக்காரர், துப்புரவு பணியாளர் உள்ளிட்ட காலிபணியிடங்களுக்கு கடந்த ஜூன் மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இதில் பரிசீலனைக்கு பிறகு 9,827 விண்ணப்பங்கள் அலுவலக உதவியாளர் பதவிக்கான நேர்காணலுக்கும், 1706 விண்ணப்பங்கள் இரவுக்காவலர், தோட்டக்காரர், துப்புரவு பணியாளர் உள்ளிட்ட பதவிக்கான நேர்காணலுக்கும் உரியவர்களாக கண்டறியப்பட்டு அதன் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
இன்றும் (சனிக்கிழமை) நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) அலுவலக உதவியாளர் பணிக்கான நேர்காணலும், இரவுக் காவலர், தோட்டக்காரர், துப்புரவு பணியாளர் உள்ளிட்ட பணிக்கான நேர்காணல் 26-ந் தேதியும் நடைபெறுகிறது. நேர்காணலுக்கு அழைப்பு கடிதம் வரப்பெறாதவர்கள் கோவை மாவட்ட நீதிமன்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகுதி வாய்ந்தோர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் உரிய ஆவணங்களுடன் குறிப்பிட்ட தேதியில் நேர்காணலுக்கு வருமாறு அறிவுறுத்தப்படுகிறது.
22, 23-ந் தேதிகளில் நடைபெற உள்ள முதல்கட்ட நேர்காணலுக்கு பிறகு அதிகபட்ச மதிப்பெண் பெற்றவர்கள் பட்டியல் 23-ந் தேதி இரவு கோவை மாவட்ட நீதிமன்ற வலைதளத்தில் வெளியிடப்படும். அறிவிப்பு பலகையிலும் ஒட்டப்படும்.
அலுவலக பணியாளர் பதவிக்கு 24-ல் நடைபெறும் 2-ம் கட்ட நேர்காணல் தேர்வானவர்கள் பட்டியல் அன்றைய தினமே வெளியிடப்படும். 26-ந்தேதி இரவுக்காவலர், தோட்டக்காரர், துப்புரவு பணியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு முதல் மற்றும் 2-ம் கட்ட நேர்காணல் நடத்தி, அன்றைய தினமே முடிவு வெளியிடப்படும்.
மேற்கண்ட பதவிக்கான நேர்முக தேர்வுகள் முழுவதும் வெளிப்படைத்தன்மையுடன் தகுதி அடிப்ப டையில் மட்டுமே நடைபெறும். எவ்வித சிபாரிசும் ஏற்கப்படாது. 3-ம் நபர் தலையீடும் இருக்காது. மூன்றாம் நபர்கள் யாரும் விண்ணப்பதாரர்களை அணுகி பணம் பெற்றாலோ அல்லது விண்ணப்பதாரர்கள் யாரையாவது அணுகி பணம் கொடுத்தோ ஏமாற வேண்டாம். தேர்வு செய்யப்படும் நபர்கள் குறித்து ரகசிய விசாரணை நடைபெறும்போது முறைகேடான வழியில் தேர்வாக முயன்று இருந்தால் அவர்களுடைய பணியாணை ரத்து செய்யப்படும். அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும்.
ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் அனைத்து புதிய வழக்குகளும் பொது மையம் மூலம் பதிவு செய்யப்படும். குறிப்பிட்ட நீதிமன்றத்திற்கு சென்று தாக்கல் செய்ய வேண்டியதில்லை. சிவில் வழக்குகளுக்கு ஏற்கனவே இந்த வசதி செய்யப்பட்டு நடைமுறையில் இருந்து வரும் நிலையில், தற்போது அனைத்து வழக்குகளுக்கும் இது ஏற்படுத்தப்படுகிறது.தாக்கல் செய்யப்படும் வழக்குகளுக்கு உடனடியாக ஒப்புகை சீட்டு அல்லது வழக்குகளுக்கான பிரத்யேக எண் உடனே வழங்கப்படும். இதன் மூலம் வழக்கின் நிலையை உடனடியாக இணையதளம், மொபைல் ஆப் மற்றும் தொடுதிரை மூலம் தெரிந்து கொள்ளலாம். வழக்கு விவரங்கள் வக்கீல்களுக்கு இ-மெயில் மற்றும் குறுஞ்செய்தி மூலம் தினமும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
வழக்கு விசாரணை, அலுவலக நடைமுறைகள் அனைத்தும் கண்காணிப்பு கேமராவுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கைதிகள் நீதிமன்றத்துக்கு வரும்போது அவர்கள் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை வந்தால் அவர்களை பாதுகாப்பாக வைத்திருக்க லாக்-அப் ரூம் கட்டப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. மேம்படுத்தப்பட்ட காணொலி காட்சி வசதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கூடுதல் நீதிபதி குணசேகரன் உடன் இருந்தார்.
Related Tags :
Next Story