கரூரில் வங்கி அதிகாரிகள் வேலைநிறுத்தம்


கரூரில் வங்கி அதிகாரிகள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 21 Dec 2018 9:45 PM GMT (Updated: 21 Dec 2018 9:25 PM GMT)

கரூரில் வங்கி அதிகாரிகள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டனர்.

கரூர்,

ஊதிய ஊயர்வு கேட்டும், பொதுத்துறை வங்கிகளை இணைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வரன்முறைப்படுத்தப்பட்ட வேலை நேரம் வழங்ககோரியும், பென்சன் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தினர் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் பழைய பைபாஸ் ரோடு ஸ்டேட் வங்கி அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் நரசிம்மன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ரகு, செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், கரூரில் உள்ள வங்கிகளில் புதிய வங்கி கணக்கு தொடங்குவது உள்ளிட்ட வங்கி சேவையில் பாதிப்புகள் ஏற்பட்டன.

மேலும் இன்று 4-வது சனிக்கிழமையையொட்டியும், நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் வங்கிககளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. வருகிற 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக விடுமுறை விடப்படுகிறது. அதனை தொடர்ந்து 26-ந்தேதி புதன்கிழமையன்று 9 முன்னணி வங்கி சங்கங்களின் கூட்டு அமைப்புகள் சார்பில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதன்காரணமாக நேற்று கரூரில் உள்ள பொதுத்துறை வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்காக மக்கள் கூட்டம அலைமோதியபடி இருந்ததை காண முடிந்தது.

மேலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையைாக வங்கி நிர்வாகத்தினர் ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பி விட்டு சென்றனர். எனினும் தொடர் விடுமுறை வருவதால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை பாதிக்கப்படும் என்பதால் கரூரில் உள்ள தொழில் நிறுவனத்தினரும் ஏற்றுமதி, இறக்குமதிக்காக மாற்று ஏற்பாடுகளை கையாண்டு வருகின்றனர்.

Next Story